2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சவூதியில் என் மனைவி தற்கொலை செய்துக்கொள்ளவில்லை: கணவன்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்ட தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது கணவன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

புத்தளம்,கரைத்தீவு பிரதேசத்தைச்சேர்ந்த தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் அப்பெண்ணின் கணவர் எஸ்.ஏ. நளீம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

36 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான தம்பி மரைக்கார் தாஹிரா உம்மா என்ற குடும்ப பெண்னே ஜித்தாவில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவருக்கு கடந்த 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் 2012 ஆம் ஆண்டு 04 ஆம் திகதி 10 ஆம் மாதம்  ஜித்தாவுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு தொலைப்பேசி மூலம் நான்கு தடவைகள் மட்டுமே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம்  வீட்டு உரிமையாளர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், தன்னை எவ்வாறாயினும் மீட்டு இலங்கைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மனைவி தன்னிடம் தெரிவித்ததாக உயிரிந்தவரின் கணவர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து தான் வேலைக்கு அனுப்பிய முகவர் நிலையத்துடன் தொடர்பு கொண்டு விடயத்தினை தெளிவு படுத்தியதாகவும் ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் கடந்த 4 ஆம் திகதி இறுதியாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டதாகவும் அச் சமயமும் தன்னை விரைவாக மீட்குமாறு கேட்டுள்ளார்.

எனவே, தனது மனைவி தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் அவர் வேலை செய்த வீட்டில் துன்புறுத்தல் காரணமாகவே உயிரிழந்திருக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X