-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா
வெளிநாடுகளில் இருந்து கற்பிட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இடைத்தரகர்கள் ஹோட்டல்களில் தங்க வைக்காது வாடகை வீடுகளில் தங்க வைப்பதாகவும் இதனால் பொருளாதார ரீதியில் தாம் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் கற்பிட்டியிலுள்ள உல்லாச ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் கற்பிட்டியிலுள்ள தீவு, டொல்பின் மீன்கள், ஒல்லாந்தர் கால நினைவுப் படிகங்கள் உள்ளிட்ட பல இடங்களை பார்வையிடுவதற்காக கற்பிட்டிக்கு விஜயம் செய்கின்றனர்.
இவ்வாறு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் இடைத்தரகர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆகியோரினால் கற்பிட்டி பிரதேசத்தை அண்டிய வீடுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால் கற்பிட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உல்லாச ஹோட்டல்களில் தங்குவதற்கு செலவழிக்கும் பணத்தை விடவும் பல மடங்கு பணத்தை குறித்த இடைத்தரகர்களுக்கு வீடு, உணவு, போக்குவரத்து என்பனவற்றுக்காக செலவழிக்கிறார்கள்.
இவ்வாறு பாதுகாப்பின்றி குறித்த வீடுகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் கமெரா, பெறுமதிமிக்க கைத்தொலைபேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட ரொக்கமும் களவாடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வீடுகளில் தங்க வைப்பதனால் பல மூலதனங்களை செலவழித்து கற்பிட்டி பகுதிகளில் உல்லாச ஹோட்டல்களை அமைத்துள்ள உரிமையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமையினால் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கற்பிட்டி பிரதேச சபைக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் குறித்த ஹோட்டல் உரிமையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.