-எஸ்.எம்.மும்தாஜ்
முகத்தை முகமூடியொன்றினால் மறைத்துக் கொண்டு மாதம்பையில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிற்குள் நுழைந்துள்ள மூவர், அங்கிருந்த தொழிற்சாலையின் முகாமையாளரை வாளால் வெட்டி கடுமையாகத் தாக்கி காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த ரசிக ஜயவீர (வயது 36) என்பவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாம் பணியாற்றும் தொழிற்சாலையினுள் நுழைந்தவர்கள் முகமூடி அணிந்த நிலையில் காணப்பட்டதாக அத்தொழிற்சாலையின் பணியாளர்கள் தெரிவித்தனர். இவர்கள் தொழிற்சாலையின் மதிற்சுவர் மீதேறி உள்ளே வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்திய நாட்டவருக்குச் சொந்தமான மாதம்பை சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்திருக்கும் பழைய இரும்புகளை உருக்கி மீள இரும்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் முகாமையாளரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவராவார்.
பழைய இரும்புகளைக் கொள்வனவு செய்யும் தொழிற்சாலையினருகில் கப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தொழிற்சாலையின் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என தெரிவிக்கும் மாதம்பை பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.