2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை மாணவி கடத்தல்; சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2013 ஜூலை 16 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரை பாடசாலை சீருடையிலேயே கடத்திச் சென்றதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 7 மணியளவில் இம்மாணவி கடத்தப்பட்டுள்ளதுடன் 7.45 மணியளவில் சந்தேக நபரை சிறிய ரக லொறி ஒன்றுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாதம்பை பிரதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். இன்று காலை வழமை போல் சைக்கிளில் பாடசாலை செல்லும் போது அவ்வழியால் வந்துள்ள சந்தேகநபர் சிறுமியையும், சிறுமி பயணித்த சைக்கிளுடன் சேர்த்து லொறியொன்றில் கடத்திச் சென்றுள்ளார்.

இச்சம்பவத்தை அவதானித்துள்ள வேறொரு நபர் குறித்த லொறியைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளார். இதேவேளை இச்சம்பவம் பற்றி அறிந்த குறித்த பாடசாலையின் அதிபரும் ஏனையோரும் சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இத்தகவலைப் பெற்ற மாதம்பை பொலிசார் உடன் செயற்பட்டு சிறுமி கடத்தப்பட்ட லொறியினைப் பின்தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் லொறியினுள் இருந்த சிறுமியையும், அவளது பைசிகளையும் கைப்பற்றிய பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்தியுள்ள மாதம்பை பொலிசார் அவரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .