2025 மே 07, புதன்கிழமை

20ஆம் யுத்தம் ஆரம்பம்: மனோ

Gavitha   / 2015 ஏப்ரல் 29 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மனோ கணேசன்

நாடாளுமன்றத்தில் 19ஆம் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூல வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களையும் நாம் பாராட்டுகின்றோம்.

அதேவேளை 19இன் முடிவுடன், 20ஆம் திருத்தம் என்ற தேர்தல் முறை  மாற்ற போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பதை இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து செயற்படும் அரசியல் கட்சிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், 19ஐ விட, 20ஆம் திருத்தம் தொடர்பாகவே இந்நாட்டு சிறுபான்மை மக்கள் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.

20ஆம் திருத்தம் என்ற பெயரில் எங்களை பெரும்பான்மை சக்திகள் சில ஏமாற்றப்பார்க்கின்றன. எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யாத எந்த ஒரு திருத்தத்துக்கும் நாம் உடன்பட போவதில்லை. இந்த பிரச்சினையை குறைத்து மதிப்பிட வேண்டாம். இது வாழ்வா, சாவா என்ற எங்கள் உயிர் பிரச்சனை. இவற்றை உறுதி செய்ய, இன்று நாம் நடத்தும் அரசியல் பேச்சுவார்த்தைகள் பயனளிக்க விட்டால், நியாயம் வேண்டி சத்தியாகிரகம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

அத்துடன் நீதியை தேடி நீதிமன்றம் செல்லவும் முடிவு செய்துள்ளோம். இதற்கு நமது மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும்   அரசியல் பேதங்களை மறந்து ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும்  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு  புதன்கிழமை (29) கொழும்பில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பல பெரும்பான்மை தரப்புகள், உத்தேச 20ஆம் திருத்தம் என்ற பெயரில் பல்வேறு யோசனைகளை ஏற்கெனவே முன்வைத்துள்ளன. இவற்றை ஆராய்ந்துள்ளதில் இவை தொடர்பாக எமக்கு திருப்தியடைய முடியவில்லை. எனவே சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளின் சார்பாக எமது சொந்த தேர்தல் முறை திருத்த யோசனைகளை நாம் தற்சமயம் தயாரித்து வருகிறோம். அவற்றை எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி, பிரதமர், தேர்தல் ஆணையாளர் ஆகியோரிடம் சமர்ப்பித்து நாம் பேச்சுவார்த்தைகளை நடத்த எண்ணியுள்ளோம்.

ஒட்டுமொத்த தமிழர் சனத்தொகையில் சுமார் ஐம்பது விகிதமானோரும்  ஒட்டுமொத்த முஸ்லிம் சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரும் தென்னிலங்கை மாவட்டங்களிலேயே வாழ்கின்றனர். ஆகவே ஏறக்குறைய 60 சதவீத சிறுபான்மை மக்கள் தென்னிலங்கையில் வாழ்கின்றனர் என்பது புள்ளிவிபரம் சொல்லும் உண்மை ஆகும்.

தேர்தல் முறை மாற்றம் பிரதானமாக தேர்தல் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையை கொண்டதாகும். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் கணிசமாக வாழும் தேர்தல் தொகுதிகள் பல இருக்கின்றன. ஆனால், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே நிலைமை அப்படி இல்லை. எனவே  தென்னிலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவங்களை உறுதிபடுத்தாத எந்த ஒரு தேர்தல்முறை மாற்றமும் இந்நாட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாகவே கருதப்படும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களே இந்த தேர்தல் முறை மாற்ற செயற்பாட்டில் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். நான் திரும்ப, திரும்ப கூறி வரும் இந்த உண்மை இன்று உணரப்பட்டுள்ளதாக நம்புகின்றேன். இவை தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

இங்கே நாம் பெரும்பான்மை இனத்துடன் கலந்து வாழ்வதால் நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் ஒரே தொகுதியில் தேர்வு செய்யப்படும் பல்-அங்கத்தவர் தொகுதிகள் தேவை. கடைசியாக 40 வருடங்களுக்கு முன்னர், தேர்தல் தொகுதி சீரமைப்பு நடைபெற்றது. அப்போது நாட்டின் சனத்தொகை 75 இலட்சம். இன்று அது 205 இலட்சம். அப்போது குடியுரிமை, வாக்குரிமை இல்லாமல் இருந்த மலையக தமிழ் பரம்பரையினர் இன்று இன்று வாக்களிக்கும் தகைமை பெற்றுள்ளனர்.

தென்னிலங்கையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிதுவங்களை உறுதி செய்ய கொழும்பு மத்தி, பேருவளை, ஹரிஸ்பத்துவ என்று மூன்று பல்-அங்கத்தவர் தொகுதிகள் உள்ளன. தமிழர்களுக்கு நுவரேலியா-மஸ்கெலியா  பல்-அங்கத்தவர் தொகுதி மட்டுமே உண்டு. இவை போதாது. எனது மாவட்டமான கொழும்பில், மத்திய கொழும்புக்கு மேலதிகமாக வட கொழும்பு, தென் கொழும்பு என இன்னமும் இரண்டு பல்-அங்கத்தவர் தொகுதிகளை நான் கோரியுள்ளேன்.

கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா மாவட்டங்களிலும் பல்-அங்கத்தவர் தொகுதிகள் அவசியம்.  நுவரேலியா-மஸ்கெலியா பல்-அங்கத்தவர் தொகுதி பிரிக்கப்பட்டு மஸ்கெலியா, ஹட்டன், கொட்டகலை, நுவரேலியா என்ற நான்கு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும். நுவரேலியா மாவட்டத்தின் கொத்மலை, வலப்பனை, ஹன்குரன்கெத தொகுதிகள்  இணைக்கப்பட்டு பல்-அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X