ரஸீன் ரஸ்மின் / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுக்கும், அனல்மின் நிலைய அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல், அண்மையில் அனல் மின்நிலைய கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்ரஸின் பிரதித் தலைவருமான எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஏ.ஆர்.எம். முஸம்மில் உட்பட அனல் மின் நிலைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நுரைச்சோலை அனல் மின் நிலைலையத்தின் நிலக்கரி மூலமாக பெறப்படுகின்ற நச்சு வாய்ந்த தூசு துனிக்கைகள் பிரதேச மக்களுக்கு பெரிதும் பாதிப்பை செலுத்துவதாக கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனால், விவசாயிகள், மீனவக் குடும்பங்கள் பாதிப்படைவதுடன், மக்கள் சுவாச நோய்த்தாக்கங்களுக்கும் உள்ளாகி வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், இவ்வாறு அனல் மின் நிலையத்திலிருந்து தூசிகள் வெளியேறுவது சுற்றாடலுக்கே பெரும் சவாலாக இருப்பதாகவும், இந்த நிலைமை அடுத்த வருடத்துக்குள் மாற்றப்பட்டு, அனல் மின் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள நிலக்கரியில் இருந்து வருகின்ற தூசு துணிக்கைகள் சுற்றாடலை பாதிக்காத வகையில் தேவையான முறைகளை கையாண்டு மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுத்தருமாறும் மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தால் விவசாயம், கடற்றொழில் பாதிப்பு, நீர் பற்றாக்குறை, தோல் நோய் போன்ற காரணங்களால் இப்பிரதேச மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அம்மக்களுக்கு எதுவிதமான இழப்பீடுகளும் வழங்ஙப்படவில்லை எனவும் மக்கள் பிரதிநிதிகள், அனல் மின்நிலைய அதிகாரிகளிடம் விசனம் தெரிவித்தனர்.
மக்கள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய அதிகாரிகள், நிலக்கரியைப் பாதுகாப்பதற்கு முயற்சிப்பதாகவும், பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் தூசுகளால் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தேவைப்படும் போது நஷ்டஈடுகளையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர்.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025