ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூன் 29 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மற்றும் கற்பிட்டி வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தவுடனான விசேட கலந்துரையாடலொன்று, சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவி, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி ரஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி அமைப்பாளர் ஏ.ஆர்.எம் முசம்மில், வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் என்.பரீத், புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நகுலநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழு, சுகாதார அமைச்சரை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது புத்தளம் தள வைத்திசாலை மற்றும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலை என்பவற்றில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர், சுகாதார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய சுகாதார அமைச்சர், புத்தளம் மற்றும் கற்பிட்டி வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு, குருநாகல் மாவட்டத்திலுள்ள மேலதிக தாதியர்களில் இருந்து 50 பேரை புத்தளம் மாவட்டத்துக்கு இடமாற்றிக் கொடுப்பதுடன், புதிய தாதியர் நியமனங்கள் வழங்கப்படும் போது புத்தளம் மாவட்டத்துக்கு 30 தாதியர்களை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்தார்.
அத்துடன் புதிதாக வைத்தியர்கள் நியமிக்கப்படும் போது, புத்தளம் மாவட்டத்துக்கு விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தெரிவித்தார்.
இதேவேளை, புத்தளம் தள வைத்தியசாலையில் தாதியர் தங்குமிட விடுதி நிர்மாணிப்பதற்காக 40 மில்லியன் ரூபாயும் நோயாளர் தங்குமிட வார்ட் நிர்மாணிப்பதற்காக 30 மில்லியன் ரூபாயும், வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபாயும் சுகாதார அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அத்துடன், கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மூன்று மாடி கட்டடமும் நிர்மாணிப்பதற்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பணிகளை விரைவில் பூர்த்தி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் இருப்பதை கருத்தில்கொண்டு சுகாதார அமைச்சரிடம் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றுக்கான வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.
அத்தோடு, அடுத்த வாரம் தொடக்கம் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு வாரம் ஒரு முறை உடற்கூற்று நிபுணர் (VP) பணிக்கு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, மன்னார், திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்ட வைத்தியசாலைகளின் குறைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
39 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
39 minute ago
53 minute ago
1 hours ago