2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘போதைப்பொருளிலிருந்து மக்களைக் காப்போம்’

ரஸீன் ரஸ்மின்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இளம் சந்ததியினரை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்க எல்லோரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” என, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் பணிப்பாளர் சாக்ய நாணயகார தெரிவித்தார்.

புத்தளம், தில்லையடியில் இயங்கி வரும் பிரன்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் பிரிவு நடத்திய போதைப்பொருள் பாவனை தொடர்பில் அரச உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வொன்று இன்று (28) இடம்பெற்றது.

முந்தல் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜனக பர்னாந்துவின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில், பிரன்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பந்துல விஜேசிங்க, பிரன்ட்ஸ் நிறுவத்தின் தில்லையடி அலுவலக நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் பி.சுபியானி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

முந்தல் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கிராமப் புறங்களில் கடமைபுரியும் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும், முந்தல் பொலுஸாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் இந்த செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“சிகரெட், மதுபானம், கஞ்சா போன்ற போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவோர் சமூகத்திலிருந்து தூரமாக்கப்படுகின்றனர். போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தாம் ஏன் குடிக்கிறோம், புகைக்கிறோம் என்று தெரியாமல் போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளார்கள்.

“ஒரு கிராமத்தில் புகைத்தல் மற்றும் மது அருந்துதலால் ஒரு வருடத்துக்கு குறைந்தது சுமார் 250 இலட்சம் வரை செலவு செய்யப்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. இதில் கண்ட பலன்கள் எதுவுமில்லை. இறுதியில் நோய்வாய்க்குற்படுவதுதான் மிச்சமாகும்.

“எனவே, எமது இளம் சந்ததியினரை பாதுகாக்க வேண்டும். போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாரதூரமான பாதிப்புகள் தொடர்பில் தெளிவுகளை வழங்குவது, அந்த கிராமத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களின் கடமையாகும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X