2025 மே 15, வியாழக்கிழமை

மான் வேட்டையில் ஈடுபட்ட எழுவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர ஜெயசிங்க, முஹம்மது முஸப்பிர்

வில்பத்து வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மான்களை வேட்டையாடி 70 கிலோகிராம் இறைச்சியுடன் கைதுசெய்யப்பட்ட எழுவரையும் 21 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம்  மாவட்ட பதில் நீதவான் சுனில் ஜெயவர்தன உத்தரவிட்டுள்ளார்.     

சட்டவிரோதமான முறையில் வில்பத்து வனப்பகுதிக்குள் சென்றது மட்டுமின்றி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை உபயோகித்து,  அங்கிருந்த  மூன்று மான்களை வேட்டையாடி, 70 கிலோகிராம் இறைச்சியுடன் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நபர்கள், நீண்ட நாட்களாக இந்த மான் வேட்டையில் ஈடுபட்டுவருவதாகவும் குறித்த இறைச்சிகளை சிலாபம், நீர்கொழும்பு பகுதிகளில் விற்பனை செய்வதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வனவிலங்கு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து; சனிக்கிழமை(17) மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடந்த புதன்கிழமை சொகுசு வேனில் வில்பத்து தேசிய வனாந்தரத்தினுள் சட்டவிரோதமான முறையில் நுழைந்துள்ளதோடு, அவர்கள்  அங்கு  தங்கிருந்துள்ள நிலையிலேயே இவ்வாறு மான்களை வேட்டையாடி அவற்றை இறைச்சியாக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வேட்டையாடிய மான் இறைச்சியை அவர்கள் பாதுகாப்பான முறையில் காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்து பின்னர் கடல் வழியாக படகு மூலம் வந்து இறைச்சியை எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது எட்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுள் ஒருவர் காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை தேடி எடுப்பதற்காகச் சென்ற வேளை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், இவ்வாறு தப்பிச் சென்ற சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதோடு அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து உள்ளூர்த் துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்கள், மூன்று வெற்றுத் தோட்டாக்கள், கத்தி ஒன்று, கோடரி ஒன்றுடன் சுமார் 70 கிலோகிராம் மான் இறைச்சி மற்றும் அவர்கள் பயணித்த சொகுசு வேனையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .