முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூன் 20 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், இன்று (20) நடைபெற்ற வடமேல் மாகாண சபைக் கூட்டத்தின் போது, புத்தளம் மாவட்ட மக்களுக்கு நீதி கோரி, மேசை மீது ஏறி நின்று, “உரிய தீர்வை வழங்கும் வரை கீழே இறங்கப் போவதில்லை” எனக் கூறியமையால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டத்திலுள்ள அரச காணிகளை , புத்தளம் மாவட்ட மக்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள போதிலும் அவர்களுக்குக் காணிகளை வழங்காது, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தனவந்தர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கே, இவ்வாறு அவர் தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், தீர்வையும் கோரி நின்றார்.
வடமேல் மாகாண சபையின் கூட்டம், இன்று காலை 9.30 மணிக்கு சபைத் தலைவர் டிக்கரி பண்டார தலைமையில் கூடியது.
சபை கூடி சற்று நேரத்தில், கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ், தனது மேசையின் மீது ஏறி நின்றார்.
இதன்போது தனது கருத்தை வெளியிட்ட அவர்,
“புத்தளம் மாவட்டத்தில் அதிகமான அரச காணிகள் உள்ள நிலையில், அவற்றை உப்புச் செய்கை, இறால் வளர்ப்பு மற்றும் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கு என பல்வேறு தேவைகளுக்காக, புத்தளம் மாவட்ட மக்கள் அரசாங்கத்திடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
“எனினும், அந்த உள்;ர் மக்களின் கோரிக்கைகள் வருடக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், திடீரென வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தனவந்தர்களுக்கு புத்தளம் மாவட்டத்தின் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
“இது இந்த மக்களுக்கு செய்யும் அநீதியாகும். இந்த மாகாண சபையின் காணி அமைச்சர், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். புத்தளம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலாளர்களும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
“எனவே, இந்த மாகாண சபை, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வந்தர்களுக்கு, புத்தளம் மாவட்டத்திலுள்ள காணிகளை வழங்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இதன் பின்னர், வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசநாயக்கா மற்றும் காணி அமைச்சர் சுமல் திசேரா ஆகியோர், தாம் இவ்விடயம் தொடர்பில் உடன் ஆராய்ந்து பார்ப்பதாகத் தெரிவித்தனர்.
அத்துடன், அவ்வாறு வெளியாருக்குக் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவ்வாறான நடவடிக்கைகள் தமக்கும் தெரியாமலேயே இடம்பெற்றிருப்பதால் இனி அவ்வாறு இடம்பெற அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தனர்.
இதனையடுத்தே, மாகாண சபை உறுப்பினர், மேசையிலிருந்து இறங்கினார்.
எனினும், இதற்கு உரிய தீர்வு கிடைக்காது போனால், மக்களை இணைத்துக்கொண்டு வீதியில் இறங்கி, இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக, வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்தார்.
11 minute ago
40 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
40 minute ago
54 minute ago
1 hours ago