2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வடிகான் இல்லாமையால் மக்கள் அவதி

Thipaan   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

 

புத்தளம் நகர சபை எல்லையோடு ஒட்டியுள்ள புத்தளம் பிரதேச சபைக்கு கட்டுப்பட்ட முள்ளிபுரம் மற்றும் மக்கள்புரம் பொது மக்கள், கழிவு நீர் வழிந்தோடுவதற்கான வடிகான்  இல்லாமை உள்ளிட்ட பல்வேறு அசௌகரியங்களுடன் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

புத்தளம் நகரில் அமைந்துள்ள இந்த இரு கிராமங்களுமே மிகவும் பின் தங்கிய கிராமங்களாகும். முள்ளிபுரம் முஸ்லிம் மகா வித்தியாலயம், இஹ்யாவுல் உலூம் அரபுக்கல்லூரி, முள்ளிபுரம் ஜும்மா மஸ்ஜித் என்பன இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன.  புத்தளத்தின் பொருளாதார மையமான உப்பு உற்பத்தி செய்யப்படும் பிரதேசமும் இக்கிராமங்களுக்கு  அருகிலேயே அமைந்துள்ளது.

ஆரம்ப கால எல்லை நிர்ணயத்தின் பிரகாரம் இந்த இரு கிராமங்களும் புத்தளம் பிரதேச சபைக்கு உள்ளடங்குகின்றன. புத்தளம் பிரதேச சபை காரியாலயம் அமைந்துள்ளதோ, புத்தளம் நகருக்கு அப்பாற்பட்ட மதுரங்குளி பிரதேசத்தில் ஆகும். ஆகையால், இப்பிரதேசத்தில் வதியும் பொது மக்கள் தமது குறைபாடுகளை தீர்த்துக்கொள்வதில் திரிசங்கு நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

புத்தளம் நகர சபைக்கு முறைப்பாடு செய்ய சென்றால் அது எமது பிரதேசம் இல்லை என பதில் கிடைக்கின்றது. ஆனால், புத்தளம் பிரதேச சபை மிகவும் தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு சென்று முறையிட பொது மக்கள் பின் வாங்குகின்றனர்.

புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் கே.ஏ. பாயிஸ் தனது பதவி காலத்தின் போது இவ் இரு  கிராமங்களையும் புத்தளம் நகர சபை எல்லைக்கு உள்வாங்க பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டபோதும் அவை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இப்பிரதேசங்களில் வடிகான்கள் சீராக இல்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கழிவு நீர் வழிந்தோட இடமின்றி வீடுகளுக்கு முன்னால்  தேங்குவதால், தாம், நோய்களுக்கு ஆளாகுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தெரு விளக்குகள் பழுதான நிலையில் காணப்படுவதால் இரவு நேர பயணங்களுக்கு அஞ்சுவதாக தெரிவிக்கும்  அவர்கள் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள்  அதிகரித்து காணப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதேசத்தில் வதியும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X