2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வரட்சியால் தங்கொட்டுவக்கு பெரிதும் பாதிப்பு

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 29 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியால், புத்தளம் மாவட்டத்தின் தங்கொட்டுவ பிரதேச செயலகப் பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தங்கொட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் நிலவும் வரட்சியின் காரணமாக குடியேற்றங்களைச் சேர்ந்த சிறுவர்கள் வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்களே பாடசாலைக்குச் செல்கிறார்கள் என, தங்கொட்டு பிரதேச செயலாளர் பிரின்ஸ் சேனாதீர தெரிவித்தார். 

புத்தளம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற புத்தளம் மாவட்ட பிரதேச அனர்த்த முகாமைத்துவ திட்டத்தைத் தயாரிக்கும் ஆரம்ப கட்ட வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த வருடங்களில் சரியான முறையில் மழை கிடைக்காத காரணத்தால் தற்போது பல மாதங்களாக தங்கொட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் ஏராளமான கிணறுகள் வற்றிப் போயுள்ளன. அத்துடன் நீர் இல்லாத காரணத்தால் வீட்டுத் தோட்டச் செய்கைகளும் முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.

“பிரதேசத்தில் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஏராளமான குடும்பங்கள், நீர் இல்லாதமையால், அத்தொழிலை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

“அதேபோன்று, குடியேற்றங்களில் வசிக்கும் மாணவர்கள் வாரத்துக்கு  2 அல்லது 3 நாட்களே பாடசாலைக்குச் செல்கின்றனர். இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது, மாணவர்களது பாடசாலைச் சீருடையைத் துவைப்பதற்கும் போதிய நீர் இல்லாததே, இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. எனவே, இப்பிரதேச மக்கள் நீர் இன்றி அனுபவிக்கும் இன்னல்கள் மோசமானது” என்றார்.

புத்தளம் மாவட்டச் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்தவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் (முன்ஆயத்தம்) சுனில்  ஜயவீர, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளார் கேர்ணல் ஜீ.ஏ.ஜே. ருத்ரிகோ, நவகத்தேகம பிரதேச செயலாளர் ஆர். பீ. ஜீ. பொடினேரிஸ், மஹக்கும்புக்கடவள பிரதேச செயலாளர் திலான் குணரத்ன, புத்தளம் மாவட்டச் செயலாளர் என். எச். எம். சித்ரானந்த உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X