2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பண்டிகைக் காலமும் ஊக்கத்தொகையும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களின் மிக முக்கியமானவொரு பண்டிகையான தீபாவளி இம்மாதத்தின் இறுதியில் வரவிருக்கிறது. அதனுடன் சேர்ந்து பெரும்பாலான ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறன. 

ஊக்கத்தொகையாகக் கிடைக்கப்பெறும் மேலதிக வருமானத்தை நம்மவர்கள் எவ்வாறு பயனுள்ளதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அறிந்திருப்பது அவசியமாகிறது. அல்லாவிடின், பண்டிகைக்கால முடிவில் மொத்த ஊக்கத்தொகையானது செலவிடப்பட்டு மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வருகின்ற நிலைமையாக நம்நிலை மாறிப்போய்விடும்.   

ஊதிய ஊக்கத்தொகையென்பது, நமது உழைப்புக்கான ஊதியம் என்பதை மனதில்கொண்டு அதற்கான செலவை பயனுள்ள முறையில் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு கிடைக்கும் ஊதிய ஊக்குவிப்புத் தொகையை முழுமையாகச் செலவழிக்காமல், எதிர்கால நன்மையை மனதில்கொண்டு அதன் பெரும்பகுதியை எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு திட்டமிட்ட முதலீடாகப் பயன்படுத்துவதே நல்லது.  

சில நிறுவனங்களில் தீபாவளிக்கான அல்லது பண்டிகைக்கால ஊக்குவிப்புத்தொகை இந்நேரம் பணியாளர்கள் கைகளுக்கு வழங்கப்படத் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும். அலுவலகங்களில், தொழில்கூடங்களில், நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு இந்த ஊக்கிவிப்புத் தொகையை பெரும்பாலும் இத்தகைய பண்டிகைக்காலத்தில் வழங்குவார்கள். பண்டிகைக்கால ஊக்குவிப்புத் தொகையென்பது பலருக்கும் ஓராண்டுகால எதிர்பார்ப்பாகும். அப்படிக் காத்திருந்து பெற்றுக்கொள்ளும் உங்கள் ஊதிய ஊக்குவிப்புத் தொகையைச் செலவழிப்பதில் மிகுந்த கவனம் அவசியமாகிறது.  

வேகமாக மாற்றமடைந்துவரும் வணிகச் சூழலில், செலவழிப்பதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன. வீட்டிலிருந்து கொண்டே கணினி மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ மிக விரைவாக நமக்கான தெரிவுகளை மேற்கொள்ளக்கூடியவாறு பல்வேறு நிறுவனங்களும் நமக்கான சேவையை வழங்குவதாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாது, இந்த பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டும், ஊக்குவிப்புத் தொகைகளை இலக்காகக் கொண்டு விசேட விற்பனையை ஆரம்பிக்கும் ஆயிரக்கணக்கான வணிகங்களை நாம் வருடம்தோறும் கடந்தே வந்திருக்கின்றோம். பெரும்பாலும், இந்த விற்பனை தந்திரங்களுக்குள் நமக்கு தேவையற்ற ஆடம்பரப் பொருள்களைக் கொள்வனவு செய்துவிட்டு அதற்காக வருடம் முழுவதும் வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பவர்களாகவே நாங்கள் இருக்கிறோம்.   

எனவே, இந்த விற்பனைத் தந்திரங்களில் சிக்காமல் நமக்குத் தேவையான, பயனுள்ள வகையில் நமது ஊதிய ஊக்குவிப்புத் தொகையை செலவழிப்பதுதான் சவாலான விடயமாகும்.  
ஊதிய ஊக்குவிப்பு தொகையானது நமது உழைப்புக்கான ஊதியமாகவே இருக்கிறது. இதனை நமது மேலதிக வருமானமாக எண்ணிக்கொண்டு அதற்கான செலவைத் திட்டமிடும் முறையை நாம் மாற்றிட வேண்டியது அவசியமாகும். அத்தொகையை முழுமையாகச் செலவழிக்காமல், எதிர்கால நன்மையை மனதிற்கொண்டு அதன் பெரும்பகுதியை எதிர்காலத்தை கருத்தில்கொண்டு திட்டமிட்ட முதலீடாகப் பயன்படுத்துவதே நல்லது.  

அவசரத் தேவைக்கான முதலீடு

அவசரத் தேவைக்குப் பயன்படும்விதமாக அல்லது மிகவிரைவாகக் கைகளில் பணமாக பெற்றுக்கொள்ளக்கூடிய குறுகிய காலத் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமாகிறது. இதன்மூலமாக, வருமானம் ஈட்ட முடிவதுடன், நமது அவசர தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். குழந்தைகளின் கல்விச்செலவை மனதிற்கொண்டு அதற்கான வருமானம் பெறக்கூடிய நீண்டகால நிலையான வைப்புகள், பங்குகளில் முதலீடு செய்யலாம். அத்துடன், இந்த ஊக்கத்தொகையைக் கொண்டு உங்களுக்கான அவசரத்தேவைக்கான முதலீடுகளை நீங்கள் உருவாக்கிக்கொண்டால், எதிர்காலத்தில் நீங்கள் அவசரதேவைக்காக உங்கள் செலவுகளையோ அல்லது சேமிப்புகளையோ தியாகம் செய்ய வேண்டிய அவசியமோவில்லை. இதன்மூலமாக, எதிர்கால நலன்களை நீங்கள் திட்டமிட்டுச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.  

கடனட்டை கடன் மற்றும் வங்கிக் கடன்களை அடைத்தல்

நீண்ட கால மாதாந்த செலவாகவிருக்கும் கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர்க்கடன் போன்றவற்றில் ஏதேனுமிருந்தால், மாதத்தவணையோடு சேர்த்து, ஊதிய ஊக்குவிப்புத்தொகையைச் செலுத்துவதன் மூலமாக உங்கள் கடன்சுமையை குறைத்துக்கொள்ள முடியும்.வங்கிக்கடன்களில் இப்படி கூடுதலாகச் செலுத்தும் தொகை முழுவதையும் கடன் தொகையைக் கழிக்கப் பயன்படுத்துவார்கள். எனவே, இது கடன் சுமையைக் குறைக்கப் பெரிதும் பயனளிக்கும். அதுபோல, தங்க நகை அடைமானத்தில் இருந்தால் அதை மீட்பதற்குப் பயன்படுத்தலாம்.  

இவற்றுக்கு மேலதிகமாக, தற்காலத்தில் கடன்களுக்கு சமமாக நமக்கிருக்கும் மிகப்பெரும் கடனாக கடனட்டை நிலுவைகள் இருக்கின்றன. இந்த நிலுவைக்கான வட்டிவீதங்களும், ஏனைய கடனுக்கான வட்டிவீதங்களைப் பார்க்கிலும் மிக உயர்வாக இருக்கிறது. எனவே, உங்கள் ஊதிய ஊக்குவிப்பு தொகையை பயன்படுத்தி இதனை தீர்க்கப் பாருங்கள். இல்லாவிடின், இந்த நிலுவைக்கான வட்டியாக மிகப்பெரும் தொகையை உங்கள் மாதாந்த ஊதியத்தில் நீங்கள் இழக்க நேரிடும். இத்தகைய கடன்சுமையை நீங்கள் குறைப்பதன் மூலமாக எதிர்காலத்தில் நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி செலவீனத்தையும் குறைத்துக் கொள்ளுகிறீர்கள். இதன் மூலமாக, எதிர்கால வருமானத்தில் குறித்த செலவீனமானது சேமிப்பாக மாற்றமடைகிறது.  

ஓய்வூதிய முதலீடுகள் 

அடுத்தகட்ட மறைமுக முதலீடாக, காப்புறுதி மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதுவரை இந்த திட்டங்களை எடுக்காமலிருந்தால் இந்த ஊக்குவிப்புத் தொகையை வைத்து இந்தத்திட்டங்களை எடுக்கலாம். ஏற்கெனவே, எடுத்திருந்தால் தேவைக்கேற்ப அதனை விரிவுபடுத்தலாம். இத்தகைய திட்டங்கள் மிக நீண்டகாலத்தில் நமக்கும், நமது குடும்பத்துக்கும் பயன்தரும் ஒன்றாக இருக்கும்.  

நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தல்

நீண்டகாலமாக மனதில் நினைத்தும் பணவசதியில்லாததால் இன்னமும் நிறைவேற்ற முடியாத, சுற்றுலா, வீட்டு உள்அலங்கார வேலைப்பாடு, வண்ணம் பூசுவது, வாகனம் வாங்குவது போன்று நீண்ட காலமாக நிறைவேற்ற முடியாதிருக்கும் ஏதேனும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தால் செய்துமுடிக்கலாம். மேற்கண்ட செலவுகளில் எதற்காவது உங்களது ஊக்குவிப்புத் தொகையில் பெரும்பகுதியைப் பயன்படுத்திவிட்டு, சிறு பகுதியை மட்டுமே கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்துவது நல்லது. திட்டமிடல் இல்லாமல் போனால் “கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல” என்ற பாடலுக்கேற்ப கைக்கு வந்ததொகையும் எப்படியெப்படியோ செலவழிந்தபின் இனி அடுத்த ஊதிய ஊக்குவிப்புத்தொகைக்கு காத்திருக்கும் நிலை வந்துவிடும்.  

பண்டிகைகளை நாம் எப்போதுமே பணச் சிக்கல் இல்லாத, எதிர்காலம் குறித்த பயமில்லாத, பயனுள்ள பண்டிகைகளாக கொண்டாடுவது மிக அவசியமாகிறது. இதன்போதுதான், எதிர்காலத்துக்கான வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்ள முடியும். இதன்மூலமாக, இயந்திர சூழலில் சிக்கித்தவிக்கும் நாம் நமது எதிர்காலத்துக்கான தயார்படுத்தலைச் செய்துகொள்ள வாய்ப்பு உருவாகுவதுடன், நாம் ஏனையவர்களில் தங்கியிருக்காது நமது வாழ்க்கையை முன்னேற்றி செல்லவும் அடித்தளமாக அமையும் எனவே, உங்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற ஊக்கத்தொகையை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வதென்பதனை சரியாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .