2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'ரதுபஸ்வல தொழிற்சாலை மூடபட்டுள்ளதால் இலங்கைக்கு இதுவரை ரூ.1 பில். வரை வெளிநாட்டு வருமானம் இழப்பு'

A.P.Mathan   / 2013 நவம்பர் 20 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்
 
கம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய, ரதுபஸ்வல பகுதியில் அமைந்துள்ள டிப்ட் புரொடக்ட்ஸ் தொழிற்சாலை சுமார் நான்கு மாதகாலமாக மூடப்பட்டுள்ளதன் காரணமாக இலங்கைக்கு இது வரையில் 1 பில்லியன் ரூபா வரையில் வெளிநாட்டு வருமானம் இழப்பு நேரிட்டுள்ளதாக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மஹேஷ ரணசோம தெரிவித்தார்.
 
ரதுபஸ்வெல பகுதியில் அமைந்துள்ள டிப்ட் புரொடக்ட்ஸ் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளின் காரணமாக குறித்த பகுதியில் காணப்படும் நிலக்கீழ் நீர்நிலைகள் மாசடைவதாக தெரிவித்து, அப்பகுதி மக்கள் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்கவிடாமல் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலை குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று டிப்ட் புரொடக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது, டிப்ட் புரொடக்ட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில், 
 
வாடிக்கையாளர்கள் இழப்பு
”ரதுபஸ்வல பிரதேசத்தில் காணப்படும் நீலக்கீழ், கிணற்று நீரின் pH அளவு குறைவாக காணப்படுகின்றமைக்கும் எமது நிறுவனத்துக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை என்பது அரசாங்க அதிகார சபைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது தொழிற்சாலை தொடர்ந்தும் சுமார் 4 மாத காலப்பகுதியாக மூடிக்கிடப்பதால், நாம் எமது வெளிநாட்டு வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளோம். இது எமக்கு மட்டும் ஏற்படும் ஒரு இழப்பல்ல. முழு நாட்டுக்கும் ஏற்படும் இழப்பாகும். தேயிலை, இறப்பர், கறுவா போன்றன நாட்டுக்கு வெளிநாட்டு வருமானத்தை தேடித்தரும் துறைகளாக திகழும் அதே வேளை, இந்த கையுறை உற்பத்தி ஏற்றுமதியின் மூலமாகவும் வெளிநாட்டு வருமானம் திரட்டப்படுகிறது. குறித்த ரதுபஸ்வெல பகுதி மட்டும் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தின் 1 வீத பங்களிப்பை வழங்குகிறது. எனவே இந்த தொழிற்சாலை என்பது தொடர்ந்து மூடப்பட்டிருக்க முடியாது”
 
தொழிற்சாலையை ஆரம்பிக்க கிராமத்தார் தடை
”இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நாம் கிராம பிரதிநிதிகள் உள்ளடங்கிய பல்வேறு அமைப்புகளுடன், வெவ்வேறு மட்டங்களில் பல பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உடன்பாட்டுக்கு வந்த போதிலும், குறித்த தீர்வு இணக்கப்பாட்டுடன் தொழிற்சாலையை மீண்டும் இயக்க அப்பகுதிக்கு செல்லும் போது, அப்பகுதியை சேர்ந்த ஒரு பகுதி மக்கள் எமக்கெதிராக போராட்டம் நடத்தி எமது செயற்பாடுகளை முடக்கி வருகின்றனர். பொலிஸாரும் இவர்களுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றனர். குறித்த தொழிற்சாலைக்கு சுமார் 2 – 3 கிலோ மீற்றர் சுற்றுப்பகுதியில் காணப்படும் 3000 மக்களுக்கு குழாய் மூலம் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை வழங்க நிறுவனம் முன்வந்த போதிலும் கூட குறித்த பிரதேச மக்கள் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க தடை விதித்துள்ளனர்”.
 
அரசாங்கத்துக்கு எவ்வித தொடர்பும் கிடையாது
”இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நாம் முன்னெடுப்பதற்கு எவரும் எம்மை நிர்ப்பந்திக்கவில்லை. விசேடமாக அரசாங்கத்திடமிருந்து எமக்கு எவ்விதமான அழுத்தங்களும் வரவில்லை. நாட்டின் பொருளாதாரத்துக்கு இந்த தொழிற்சாலை உற்பத்திகள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கி வந்தன. தற்போது அந்த பங்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. உண்மையில் இந்த தொழிற்சாலை இந்த பகுதி மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது”
 
மலேசியாவிலிருந்து அழைப்பு
இதேவேளை இலங்கையில் நாம் எமது தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நாம் ஆர்வமாக உள்ள அதேவேளை, எமது தாய் நாட்டின் வளர்ச்சியில் சமூக பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் தொழில் வாய்ப்புகள், ஏற்றுமதி வருமானம், விநியோகத்தர் வாழ்வாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்ற பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக பங்களிப்பை வழங்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இந்த தொழிற்சாலையை நாட்டினுள் வேறொரு பகுதிக்கு மாற்றியமைப்பது என்பது மிகவும் செலவீனம் நிறைந்த ஒரு செயற்பாடாகும். இவ்வாறு நாம் செலவளித்து புதியதொரு இடத்தில் தொழிற்சாலையை நிறுவிய பின்னர், எமது வாடிக்கையாளர்கள் எம்மை விட்டு நீங்கி சென்றுவிட்டால், அவ்வாறு தொழிற்சாலையை அமைத்ததற்கு பலன் இல்லாமல் போய்விடும். இந்த தொழிற்சாலையை அங்கு நிறுவ வருமாறு மலேசியாவிலிருந்து எமக்கு அழைப்பு வந்துள்ளது. குறித்த கட்டடம் மற்றும் இடவசதிகள் போன்றன அங்கு தயாராகவுள்ளன. இங்கு காணப்படும் இயந்திர சாதனங்களை கழற்றி, கப்பல் மூலமாக அங்கு அனுப்பி, பொருத்தி செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது தான். ஆனாலும் நாம் எமது தாய் நாட்டின் வளர்ச்சி கருதி அந்த செயற்பாட்டை மேற்கொள்ள தயாராகவில்லை”.
 
பொதுநலவாய செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் இந்திரஜித் குமாரசுவாமி
இலங்கை தற்போது சிறந்த அபிவிருத்தி சூழ்நிலையில் காணப்படுகிறது. நாட்டின் முக்கிய இரு முதலீட்டு நாடுகளாக சீனா மற்றும் இந்தியா காணப்படுகின்றன. இந்த சந்தர்ப்பம் முன்னொரு போதும் காணப்பட்டதில்லை. இந்த இரு நாடுகளும் இலங்கையிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளும் ஒரு கேந்திர நிலையமாக பயன்படுத்தவுள்ளன. இதற்காக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது. 
 
இந்த சந்தர்ப்பத்தில் சிறப்பாக பெறுபேறுகளை வெளிப்படுத்தி இயங்கிய தொழிற்சாலை ஒன்று, திடீரென முறையான காரணம் வழங்கப்பட முடியாத ஒரு பிரசச்னை காரணமாக மூடப்பட்டுள்ளது எனும் விடயம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு செல்லுமாயின் அவர்கள் தமது முதலீடுகளை இடைநிறுத்தக்கூடும். இது சவாலான விடயமாகும். எனவே குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு துரிதமாக தீர்வு காண்பதற்கு முன்வரவேண்டும்” என்றார்.
 
சுமார் 18 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ரதுபஸ்வெல தொழிற்சாலையின் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட பிரதான நாடுகளுக்கு இறப்பர் கையுறைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் சில தயாரிப்புகளுக்கான பதிப்புரிமையை இந்த நிறுவனம் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும். உலகின் மொத்த கையுறை கேள்வியின் 5 வீதத்தை இந்த டிப்ட் புரொடக்ட்ஸ் நிறுவனம் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதீப் பத்திரண)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .