.jpg)
புகையிலை தயாரிப்புகளின் மூலமாக அரசாங்கத்துக்கு 54 பில்லியன் ரூபா வருமானம் வழங்கப்பட்டுள்ளதாக சிலோன் டொபாக்கோ கம்பனி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் கடந்த ஆண்டுடன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதி 12 வீதத்தினால் உயர்ந்துள்ளது.
ஆனாலும், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் புகையிலை தயாரிப்புகளின் விற்பனை 10 வீதத்தால் குறைவடைந்துள்ளதென அறிவித்துள்ளது. 2014 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஒன்பது மாத காலப்பகுதியில், கம்பனியின் வரிக்கு பிந்திய இலாபம் 6.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இதற்கமைய தனது பங்காளர்களுக்கு மூன்றாவது இடைக்கால பங்கிலாபமாக பங்கொன்றுக்கு 11.10 ரூபாவை அறிவித்துள்ளது. 2014 நவம்பர் 26 ஆம் திகதி இது செலுத்தப்பட வேண்டியுள்ளது.
சுங்க புள்ளிவிபரங்களுக்கமைய, பீடி பாவனை சுமார் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சிலோன் டொபாக்கோ கம்பனி, இலங்கையில் புகைபிடித்தலில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த செலவில் பீடி கிடைப்பதால் அதிகளவு பீடி விற்பனை இடம்பெறுதாக அறிவித்துள்ளது. பீடி பாவனை அதிகரிப்பு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக மக்களின் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி சிகரட் விற்பனையில் சரிவு ஏற்பட்டமைக்கு ஏதுவாக அமைந்திருந்ததாக அறிவித்துள்ளது.