.jpg)
இலங்கையில் நிதியியல் சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கின்ற கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. ஆனது, 2013 மார்ச் 31ஆம் திகதியன்று முடிவடைந்த நிதியாண்டு காலப்பகுதியில் தனது வைப்புத்தளத்தில் 90 சதவீத அதிகரிப்படைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
'எமது மொத்த வட்டி வருமானம் ரூபா 4.0 பில்லியனாக 62.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இருந்தபோதும், இவ்வருட காலப்பகுதியில் வட்டிச் செலவுகள் அதிகரித்தமையினால் தேறிய வட்டி வருமானமானது ரூபா 2.4 பில்லியனாக 38.2 வீதத்தினாலேயே அதிகரித்தது' என்று கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் எகொடகே கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களுடன் இணைந்ததாக கம்பனியினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 2012/13 நிதியாண்டுக்கான வருடாந்த பொதுக் கூட்டம் 2013 ஓகஸ்ட் 30ஆம் திகதி நடைபெற்றது.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 'நிறுவனத்தின் தேறிய இலாபம் (வரிக்குப் பின்னரான இலாபம்) கடந்த நிதியாண்டில் காணப்பட்டதை விடவும் 3.6 வீதத்தினால் அதிகரித்து ரூபா 679.4 மில்லியனாக பதிவுசெய்யப்பட்டது. இந்தப் புள்ளிவிபரங்களின் பின்னணியில் நோக்குகையில், 2010/11 நிதியாண்டுக்கான வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 60.1 மில்லியனாக காணப்பட்ட அதேநேரம் 2009/10 நிதியாண்டின் வரிக்குப் பின்னரான இலாபம் ரூபா 45.2 மில்லியான பதிவு செய்யப்பட்டது. எதிர்வரும் வருடங்களில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் இலாபத் தன்மைக்கு அனைத்து இடங்களிலுள்ள அதனது சேவை மையங்களும் சாதகமான பங்களிப்புக்களை வழங்கும் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்' என்று தெரிவித்தார்.
'நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சென்றடையும் விதத்தில் நிறுவனமானது தனது சேவை வலையமைப்பை கணிசமானளவுக்கு விஸ்தரித்துள்ளது' என்று கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் தலைவர் சிசில் பெரேரா அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 'விஸ்தரிக்கப்பட்ட இந்த சேவை வலையமைப்பின் துணையுடன் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் தனது வணிக ரீதியிலான செயற்பாடுகளை மேலும் விருத்தி செய்யக்கூடிய வகையில் தன்னுடைய ஸ்தானத்தை சிறப்பாக உறுதிப்படுத்தியுள்ளது. எந்தவொரு நிறுவனத்தினதும் வெற்றி என்பது வாடிக்கையாளர்கள் அதன்மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் பற்றுறுதி என்பவற்றை அடித்தளமாகக் கொண்டதாகும். அந்தவகையில், குறிப்பாக நிதியியல் சேவைத் துறையில் செயற்படும் எமது கம்பனியைப் பொறுத்தவரையில் நாம் அவ்வாறான நம்பிக்கையைக் கட்டியெழுப்பியுள்ளதாக நம்புகின்றோம்' என்றார்.
கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் மேற்கொண்ட மொத்தமாக ரூபா 500 மில்லியன் பெறுமதியான தொகுதிக்கடன் பத்திர வழங்கலானது - இவ்வகையான தொகுதிக்கடன் பத்திரங்களில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற வட்டி வருமானங்களுக்கு 'நிறுத்திவைத்தல் வரி' மற்றும் வருமான வரி ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்படும் என்ற புதிய வரி ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக முதன்முதலாக விநியோகிக்கப்பட்ட பட்டியிலிடப்பட்ட தொகுதிக்கடன் பத்திரமாக அமைந்தது. பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் எகொடகே கூறுகையில், 'இந்த தொகுதிக்கடன் பத்திர வழங்கலின் போது பொதுமக்கள் வெளிக்காட்டிய ஆர்வத்தை நினைத்து நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். அது முதலாவது வழங்கலாக அமைந்தது மட்டுமன்றி, குறிப்பிட்டளவு மேலதிக (Optional) தொகுதிக்கடன் பத்திரங்களை பெற்றுக் கொள்ளும் நடைமுறையும் காணப்பட்டது' என்று தெரிவித்தார்.
'மேலும், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் ஒதுக்குகளை மூலதனமயமாக்கும் நடவடிக்கையின் மூலம் நிறுவன பங்குரிமையாளர்கள் அனுகூலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அதாவது, 2013 மார்ச் 27ஆம் திகதியன்று 10.9 பங்குகளை தம்வசம் வைத்திருப்பவருக்கு 1 பங்கு (10.9:1) என்ற அடிப்படையில் இதன்போது புதிய பங்குகள் விநியோகம் செய்யப்பட்டன. எவ்வாறாயிருப்பினும், நிறுவனத்தின் இலாபம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்த அதேவேளை மறுபுறத்தில் கிளை வலையமைப்பு விஸ்தரிப்பு மற்றும் கடன்பெறுகை ஆகியவற்றுடன் தொடர்புபட்ட செலவுகள் அதிகரித்ததன் விளைவாக இலாபத்தில் மந்தமான வளர்ச்சியொன்று பதிவுசெய்யப்பட்டது' என்று தலைவர் சிசில் பெரேரா தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், 'இலங்கை தனது பேரினப் பொருளாதார அடிப்படைகளில் முன்னேறிச் செல்கின்ற அதேநேரம் 2016ஆம் ஆண்டில் 4,000 அமெரிக்க டொலரை தனிநபர் வருமானமாக அடைந்து கொள்ளும் எதிர்பார்ப்பைக் கொண்ட வளர்ச்சித் திட்டத்திற்கு அமைய சிறப்பான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் புத்தாக்கம், விரைவான வளர்ச்சி மற்றும் சேவை விஸ்தரிப்பு போன்றவற்றின் மூலம் தனக்ககென தனியிடத்தைப் பிடித்துள்ள கொமர்ஷல் கிரெடிட் போன்ற நிதியியல் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி காண்பதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் கிடைக்கும்' என்றார்.
கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் பல்வேறு புதிய நிதியியல் உற்பத்திகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக நுண் நிதியியல் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகமான உற்பத்திகளுள் 'முற்பண கடன்கள்', 'அபிவுர்தி கடன்கள்' மற்றும் 'வீடமைப்புக் கடன்கள்' ஆகியவை உள்ளடங்குகின்றன. அதேவேளை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 'Peya-King Mudal' எனும் கடன் வசதியையும் வழங்குகின்றது. இதேவேளை, நுண் நிதியியல் குடையின் கீழ் இஸ்லாமிய நிதிக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிதி உற்பத்தி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு 'ஹரி' சிறுவர் சேமிப்புக் கணக்கானது அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக சந்தைக்கு புதிய வெகுமதிகளை வழங்குவதற்கும் அதன்மூலம் புத்தாக்கத்தின் ஊடாக வழங்கப்பட்ட பெறுமதியை மேலும் பலப்படுத்துவதற்கும் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
'புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எமது உற்பத்திகளுள் அதிகமானவை – அதிலும் குறிப்பாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த நிதியாண்டின் இறுதிப் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட உற்பத்திகள், சேவைகள் வாடிக்கையாளர்களினால் பெரிதும் வரவேற்கப்பட்ட அதேவேளை, இன்னும் அதிகமான சாத்தியக்கூறுகளையும் அவை தன்னகத்தே கொண்டுள்ளன' என்று பிரதம நிறைவேற்று அதிகாரி எகொடகே குறிப்பிட்டார்.
'சமூகத்தின் நல்வாழ்வுக்கு சாதகமான பங்களிப்புக்களை வழங்குகின்ற அதேநேரத்தில் வணிக ரீதியாக கவனம் செலுத்துவதுடன் நிலைபேறான நிறுவனமாக திகழ்வதிலும் கடைப்பிடித்து வரும் உறுதியான அர்ப்பணிப்பை தொடர்ந்து பேணும் வகையில் கொமர்ஷல் கிரெடிட் ஆனது, இந்நிதியாண்டு காலப்பகுதியில் மொனராகலையில் மாதிரி பண்ணை செயற்றிட்டம், கொவி ராஜா கொவி பிம ஊடாக பல்வேறு கூட்டாண்மை சமூகப்பொறுப்பு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது, இவ்வாறான முன்னெடுப்புக்கள் சமூகத்தில் உண்மையிலேயே சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என நாம் நம்புகின்றோம்' என்று அவர் மேலும் கூறினார்.
கொமர்ஷல் கிரெடிட் நிறுவனமானது, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) 'ஆண்டின் மிகச்; சிறந்த சேவை வர்த்தகக் குறியீடு - 2012' எனும் (தங்க) விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. SLIM விருது வழங்கலின் வரலாற்றிலேயே நிதிக் கம்பனியொன்று வர்த்தக குறியீட்டின் சிறப்புத்துவத்திற்காக இந்த அளவுக்கு விருது வழங்கி அங்கீகாரம் அளிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். அதேபோன்று, 'ஆண்டின் மிகச் சிறந்த உள்நாட்டு வர்த்தக குறியீடு' பிரிவில் வெண்கல விருதையும் கொமர்ஷல் கிரெடிட் பெற்றுக் கொண்டது.
இதற்கு மேலதிகமாக, வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் வர்த்தகக் குறியீட்டின் சிறப்புத்துவத்தை வெளிப்படுத்தியமையை அங்கீகரிக்கும் வகையில், '2012 Global Awards' விருது வழங்கல் நிகழ்வில் ஐக்கிய அமெரிக்காவின் உலக வர்த்தக குறியீட்டு காங்கிரஸ் அமைப்பினால் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்திற்கு உயர் விருது வழங்கப்பட்டது. LMD சஞ்சிகையின் Brands Annual தரப்படுத்தலின் 4ஆவது பதிப்பில் இலங்கையின் முன்னணி 100 வர்த்தக குறியீடுகளில் ஒன்றாகவும் இந்நிறுவனம் இடம்பிடித்திருக்கின்றது.