.jpg)
இலங்கையின் மாபெரும் நிர்மாண கண்காட்சி என அழைக்கப்படும் 'Construct 2013' நிகழ்வுக்கு தொடர்ச்சியாக 5ஆவது வருடமாகவும் அனுசரணையை வழங்க யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (UTE) நிறுவனம் முன்வந்திருந்தது. இந்த கண்காட்சி 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இடம்பெற்றது. நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இந்த கண்காட்சி, நிர்மாணத்துறையை சேர்ந்த புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு தமது பிந்திய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்கு சிறந்த களமாக அமைந்திருந்தது.
இலங்கை தேசிய நிர்மாண சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் 'Construct' கண்காட்சி நிகழ்வானது, பிராந்திய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தொடர்ச்சியாக, 13ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'Construct' கண்காட்சி நிகழ்வில் மலேசியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வுக்கு UTE 2009ஆம் ஆண்டு முதல் பிரதான அனுசரணையாளராக அனுசரணை வழங்கி வருவதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பிரதான அனுசரணையாளராக திகழ்கிறது.
இந்த கண்காட்சி அறிமுக நிகழ்வில், ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் அமைச்சர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில் நாட்டின் நிர்மாணத்துறை கடந்த ஆண்டில் 21 வீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அடைந்திருந்த மாபெரும் வளர்ச்சியாக இதை குறிப்பிட முடியும். முன்னர் இந்த வளர்ச்சி வீதம் 5 முதல் 6 வீதங்களுக்கு இடைப்பட்டதாக பதிவாகியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இவ் வருடக் கண்காட்சியில் UTE தனது முழுமையான கட்டர்பில்லர் நிர்மாண இயந்திர சாதனங்களையும், வலு பிறப்பாக்கிகளையும், ஃபோர்க்லிஃவ்ட் ட்ரக் வகைகளையும் காட்சிப்படுத்தியிருந்தது. இதன்போது UTE ஆனது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமைந்த கணினி மயப்படுத்தப்பட்ட தீர்வாகிய 'The CAT intelligent Compaction' இனை இலங்கையில் அறிமுகம் செய்து வைத்தது. இக் கண்காட்சியில் 1000 சதுர அடி பரப்பளவில் UTE உற்பத்தி மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பெருமளவான பார்வையாளர்களையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
'கடந்த வருடங்களில் 'Construct' கண்காட்சியானது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் பங்கிடும் களமாகவும் அமைந்துள்ளது. இது நிர்மாணத்துறையில் முன்னோடியாக திகழும் நிறுவனங்களின் ஒன்றுகூடும் நிகழ்வாக அமைந்துள்ளது. இதில் நாம் தகவல்கள் மற்றும் நிகழ்கால அபிவிருத்திகள் குறித்த விபரங்களை பரிமாறிக் கொள்கிறோம். அத்துடன் எதிர்காலத்துக்கான நவீன தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது' என UTEயின் பிரதம நிறைவேற்று அதிகாரி றியாத் இஸ்மைல் தெரிவித்தார்.
உள்நாட்டு நிர்மாணத்துறையானது, சுதந்திரத்தின் பின்னர், உயர்வான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த துறையில் இலத்திரனியல் மற்றும் எந்திரவியல் பொறியியலாளர்களுக்கு அதிகளவான கேள்வி நிலவுகிறது. இந்த கேள்வியை அறிந்த படியால், அண்மையில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்ட தமது நவீன பயிற்சி நிலையத்தை திறந்து வைத்ததோடு தனது இயந்திர மற்றும் பொறிகள் திருத்தும் நிலையத்தையும் மெருகூட்டியிருந்தது. 5000 வாடிக்கையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் தொழில்துறையை சேர்ந்தவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டிருந்தனர்.