2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையில் தொழில்புரியக்கூடிய சிறந்த 15 கம்பனிகளில் ஒன்றாக 99X Technology தெரிவு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் தொழில்புரியக்கூடிய சிறந்த கம்பனிகளை தெரிவு செய்யும் முதல் கட்ட ஆய்வு இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் LMD ஆகியவற்றின் வழிகாட்டலில்Great Place to Work® கல்வியகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில், தெரிவு செய்யப்பட்டிருந்த 15 கம்பனிகளில் முதல் 5 இடங்களில் ஒன்றாக 99X Technology தரப்படுத்தப்பட்டிருந்தது. 
 
1981ஆம் ஆண்டு நிறுவப்பட்டிருந்த Great Place to Work® கல்வியகம், வருடாந்தம் சுமார் 10 மில்லியன் ஊழியர்களை கொண்ட, 5500 நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. இந்த கல்வியகத்தின் மூலம் வெளியிடப்படும் தரப்படுத்தல்களில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஒரு தரப்படுத்தலாக 'தொழில்புரிய உலகின் சிறந்த பல்தேசிய நிறுவனம்' அமைந்துள்ளது. இதில் உலகளாவிய ரீதியில் காணப்படும் சிறந்த 25 பல்தேசிய நிறுவனங்கள் தரப்படுத்தப்படுகின்றன. 2012ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் SAS Institute, Google, NetApp, Kimberly-Clark, Microsoft, Marriott மற்றும் FedEx Express போன்ற பல நிறுவனங்கள் உள்ளடங்கியிருந்தன. 
 
இலங்கையின் Great Place to Work® கல்வியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷனிகா ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'Great Place to Work® கல்வியகமானது, கடந்த சில வருடங்களாக இலங்கையின் முதல் தர நிறுவனங்களுடன் நேரடியாக பணியாற்றியிருந்ததன் மூலம் அந்நிறுவனங்களுக்கு, சிறந்த ஊழியர் கொள்கைகளை வகுத்து அவற்றை பின்பற்றவும், சிறந்த தொழில் சூழ்நிலையை ஏற்படுத்தவும் உதவிகளை வழங்கியிருந்தது. இலங்கையை சேர்ந்த தனியார் நிறுவனங்களில் மனிதவள அபிவிருத்தி பிரிவுகள் ஆற்றி வரும் செயற்பாடுகள் முதிர்ச்சியடைந்து வரும் நிலையில், இலங்கையில் எமது செயற்பாடுகளை நிறுவி, அதன் மூலம் இலங்கையில் தொழில்புரியக்கூடிய சிறந்த நிறுவனங்களை கண்டறியும் ஆய்வை முன்னெடுக்க முடிந்தது' என்றார்.
 
'எமது நோக்கம் இலங்கையை தொழில் புரிவதற்கு சிறந்த பகுதியாக மாற்றுவதாகும். இதன் மூலம் நாம் கடந்த காலங்களில் இழந்திருந்த திறமைசாலிகளை மீள கவரவும், தற்போது உள்ளவர்களை தக்க வைத்துக்கொள்ளவும் முடியும். இதனை கருத்தில் கொள்வதன் மூலம், தற்போது இலங்கையில் காணப்படும் வளர்ச்சிகரமான சூழ்நிலை, திறமைகளுக்காக நிலவும் அதிகளவு கேள்வி போன்றன இரு தரப்புக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.
 
சிறந்த 25 சர்வதேச பல்தேசிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், 99X Technology மொத்தமாக 92 வீதமான புள்ளிகளை பதிவு செய்திருந்தது. சர்வதேச ரீதியில் இந்த புள்ளி 89 ஆக அமைந்திருந்தது. இந்த புள்ளிகள், நம்பிக்கை, மதிப்பு, நேர்மை, பெருமை மற்றும் நட்புணர்வு போன்ற அனைத்து பிரிவுகளிலும் உயர்வான நேர்த்தியான பதில் கிடைந்திருந்தது. 
 
தொழில்புரிவதற்கு சிறந்த இடமாக தெரிவாவதற்கு ஏதேனும் குறிப்பிடத்தக்க காரணிகள் உண்டா என நிறுவனத்தின் ஊழியர் ஒருவரிடம் கருத்து கேட்ட போது, '99X Technology எப்போதும் எம்மை ஒரு குடும்பத்தில் உள்ளதை போல உணரச் செய்கிறது. நாம் வௌ;வேறு திட்டங்களில் பணியாற்றிய போதிலும், நாம் அனைவரும் ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்கள். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் உதவியாக அமைந்துள்ளனர். முதலாளி, தொழிலாளி என வேறுபாடுகள் எதுவும் இல்லை. அனைவரும் ஒரே சமநிலையில் மதிக்கப்படுகின்றனர்' என்றார்.
 
வெளிப்படைத்தன்மை மற்றும் மகிழ்ச்சிகரமான சூழலை கொண்டிருப்பதுடன், பதவி உயர்நிலை கட்டமைப்பு தொடர்பில் மிகவும் எளிமையான கொள்கைகளை 99X Technology பின்பற்றி வருகிறது. இதன் மூலம் பணியாற்றும் ஊழியர்கள் தொழில்சார் நிலையிலும், பிரத்தியேகமான நிலையிலும் ஊக்குவிக்கப்படுவதுடன் வெளிப்படையான தன்மையையும் கொண்டுள்ளனர். ஆக்கத்திறன் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பளிப்பதுடன், பல்வகைமையை மதித்தல் மற்றும் தொழில் மற்றும் பிரத்தியேக வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்தல் எனும் கலசாரத்தை நிறுவனம் பின்பற்றி வருகின்றதன் காரணமாக வெற்றியடைந்துள்ளது. 
 
இந்த சாதனை குறித்து 99X Technology நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோ சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் தொழில்புரியக்கூடிய சிறந்த நிறுவனங்கள் 15இல் ஒன்றாக நாம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னோடிகளாக திகழும் எமக்கு இது வலுச்சேர்ப்பது மட்டுமல்லாமல், எமது ஊழியர்கள் குறித்து நாம் காண்பிக்கும் கரிசனைக்கு சிறந்த சான்றாகவும் அமைந்துள்ளது' என்றார்.
 
சமூகத்துக்கு மீள வழங்குவது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள 99X Technology நிறுவனம், தொழில்துறை சார்ந்த அறிவையும், நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் பல துறைசார்ந்த செயலமர்வுகளையும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. இவற்றில் Software Product Engineering Conference (SPEC 2013), iPhone DevCamp, Colombo Code Camp, Colombo Agile Conference, Colombo SharePoint Camp மற்றும் Colombo Agile Camp போன்றன உள்ளடங்குகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .