.jpg)
- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்
-ச.சேகர்
கொழும்பு பங்குச்சந்தை தொடர்ச்சியாக சந்தை சீராக்கத்தை எதிர்நோக்கி வருகின்றமையால் பிரதான சுட்டிகள் மறை பெறுமதிகளை பதிவு செய்திருந்ததாக பங்கு முகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இலங்கையின் வட்டி வீதங்கள் தொடர்ந்தும் குறைவான நிலையில் பேணப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்ததை தொடர்ந்து, தொடர்ந்தும் பங்குச்சந்தை கவர்ச்சிகரமானதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் கடந்தவாரம் சற்று குறைவடைந்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,219.39 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3504.35 ஆகவும் அமைந்திருந்தன.
ஜூன் 10ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,199,970,584 அமைந்திருந்தது. கடந்தவாரம் மொத்தமாக 31,775 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 30,404 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,371 ஆகவும் பதிவாகியிருந்தன.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் கெல்சி, ஜி.எஸ்.பினான்ஸ், எம்ரிடி வோல்க்கர்ஸ், சம்சன் இன்டர்நட் மற்றும் யூனியன் கெமிக்கல்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
நேஷன் லங்கா (வாக்குரிமை), குருவிட்ட டெக்ஸ்டைல்ஸ், லோஃவ்ஸ் கேஸ், கெல் பினான்ஸ் மற்றும் டீ ஸ்மோல்ஹோல்டர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 46,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,000 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 129.51 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 203.80 ஆக காணப்பட்டிருந்தது. ஆறு மாத காலப்பகுதியின் பின்னர் கடந்த வாரம் ரூபாவின் பெறுமதி அதிகளவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.