
இலங்கையின் கைவினை தொழிற்துறையை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கையின் அன்பளிப்பு மற்றும் நினைவுசுவடுகளை வடிவமைப்பதில் பிரபல்யம் பெற்ற லக்சல நிறுவனமானது இம்மாத இறுதியில் கொழும்பு அருங்காட்சியக வளாகத்தில் புதிய காட்சியறையை திறக்கவுள்ளது. 'National Museum Gallery Café' எனும் அந்தஸ்தை கொண்ட இப் புதிய காட்சியறையானது திவி நெகும திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய 185 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இக் காட்சியறையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை 220 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக 185 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், எஞ்சிய பணம் எதிர்கால விரிவாக்கல் நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்படவுள்ளது. ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இப் புதிய லக்சல கட்டிடமானது தேசிய அருட்காட்சியகத்தின் தேசிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் புதிய காட்சியறை 30,000 இற்கும் அதிக கையிருப்பு அலகுகளை (SKU) தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாடுபூராகவும் விநியோக வலையமைப்பினையும் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளது.
இப் புதிய காட்சியறை குறித்து லக்சல நிறுவனத்தின் தலைவர் அனில் கொஸ்வத்த கருத்து தெரிவிக்கையில், 'பல ஆண்டுகளாக குறைவான செயற்திறனின் கீழ் வகைப்படுத்தப்பட்ட லக்சல நிறுவனமானது கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. எதிர்காலத்தில் திவி நெகும திட்டத்தின் கீழ் வளமான எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்கவுள்ளோம். இப் புதிய காட்சியறையைத் தொடர்ந்து, காலி மகாலா சுற்றுலா நிலையத்தில் புதிய காட்சியறையை திறக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் கண்டியில் அமைந்துள்ள எமது காட்சியறையை புதுப்பிக்கவுள்ளோம். இவ் விரிவாக்கல் செயற்பாடுகளை நாம் வெறுமனே தேசிய பொருளாதார வருவாய் உருவாக்கியாக கருதாமல் கிராமிய கைவினையாளர்கள் மற்றும் விநியோகத்தர்களுக்கான ஆதரவாக கருதுகின்றோம்' என தெரிவித்தார்.
இச் சீர்திருத்த செயற்பாடுகளின் விளைவாக, 2016 ஆம் ஆண்டிற்குள் விநியோக வலையமைப்பை 15,000 ஆகவும், கையிருப்பு அலகினை 50,000 ஆகவும் அதிகரிக்கும் குறிக்கோளுடன் நாடுபூராகவும் உள்ள 5000 கலைஞர்கள், கைவினைஞர் மற்றும் சப்ளையர்கள் லக்சல நிலையத்தில் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளனர் என மேலும் அவர் தெரிவித்தார். இத் தொடர்ச்சியான விரிவாக்கல் செயற்பாடுகள் மூலம் பல மக்களின் வாழ்வாதாரம் உயர்வடைவதுடன், தமது கலை திறமைகளை உயர் மட்டத்திற்கு உயர்த்திக்கொள்ள முடியும்.
அரச நிறுவனமாக செயற்படும் லக்சல நிலையத்தில் இலங்கை மர வேலைப்பாடுகள், பித்தளை வேலைப்பாடுகள், தோல் பொருட்கள், மட்பாண்டங்கள், பட்டிக், கைத்தறி மற்றும் இதர பொருட்கள் காணப்படுகின்றன. இப் பொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாங்குனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் லக்சலவில் விற்பனை செய்யப்படுகிறது.