
இலங்கையின் இணையப்பாவனை அதிகரித்து வரும் நிலையில், இணையத்தின் ஊடாக தமது வர்த்தக நடவடிக்கைகளை பிரசாரப்படுத்தி முன்னெடுப்பதற்கு ஒவ்வொரு வர்த்தக நிறுவனங்களும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், BestWeb.lk 2013விருது வழங்கல் நிகழ்வில் முன்னணி ஆடையலங்கார தொடரான ஃபஷன் பக் நிறுவனத்தின் இணையத்தளமான www.fashionbug.lkக்கு வெள்ளி விருது வழங்கப்பட்டது.
வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் 'இலங்கையின் சிறந்த இணையத்தளம்' போட்டித்தொடர் அண்மையில் LK Domain பதிவு அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு முதல் இந்த சிறந்த இணையத்தள தெரிவு போட்டி முன்னெடுக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் இருந்து வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குபற்றுநர்கள் இந்த விருதுகள் வழங்கும் போட்டியில் பங்குபற்ற தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விருது வழங்கலில் ஃபஷன் பக் நிறுவனத்தின் இணையத்தளம் வெள்ளி விருதை பெற்றுக் கொண்டமை குறித்து நிறுவனத்தின் பணிப்பாளர் ஷபீர் சுபியன் கருத்து தெரிவிக்கையில், 'இந்த ஆண்டின் BestWeb.lk போட்டியில் நாம் வெள்ளி விருதை வெற்றி கொண்டமையையிட்டு பெருமையடைகிறோம். எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் நாம் சிந்தித்து முன்னெடுத்த அபிவிருத்தி நடவடிக்கைகள் எமக்கு வெற்றியை தேடித்தந்தது. புதிய டிஜிட்டல் கொள்கைக்கு அமைவாக, எமது இணையத்தளம் மீள் வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்தும் மாறுபட்டு வரும் சமூக கட்டமைப்புகளுக்கு அமைவாக எமது சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
'அடுத்த பெரிய நடவடிக்கையாக நாம் எமது 'Online Store' ஐ அறிமுகம் செய்வது குறித்த நடவடிக்கைகளை அதிகளவு ஈடுபாட்டுடன் முன்னெடுத்து வருகிறோம்' என மேலும் குறிப்பிட்டார்.
இந்த விருதுகளுக்கான இணையத்தள தெரிவுகள் மூன்று கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன. தொழில்நுட்பம், வடிவமைப்பு, உள்ளடக்கம் மற்றும் ஈடுபாடு போன்றன நிபுணத்துவம் வாய்ந்த நடுவர்கள் குழுவினரால் ஆராயப்பட்டு மொத்த புள்ளிகளில் 70 வீதமானவை வழங்கப்படுவதுடன், பார்வையாளர்களின் வாக்களிப்பு, இணையத்தளத்தை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை போன்றன முறையே 20 வீதத்தையும் 10 வீதத்தையும் வழங்கியிருந்தது.
டிஜிட்டல் முன்னெடுப்பு மற்றும் ஈடுபாட்டு செயற்பாடுகளுக்குள் மேலதிக உள்ளார்ந்த அம்சமாக, உத்தியோகபூர்வ Mobile App ஐ அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. 'Fashion Bug Mobile App' என அழைக்கப்படும் இந்த ஆப்ளிகேஷன், iPhone மற்றும் Andriod கட்டமைப்பை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆடையகத்தின் நவீன தெரிவுகள், வெகுமதி திட்டங்கள், விலைக்கழிவுகள், புதிய வடிவமைப்புகள், செய்திகள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பார்வையிடக்கூடியதாக அமைந்துள்ளது. சமூக வலையப்பின்னல் மற்றும் GPS வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக அருகிலுள்ள காட்சியறையை இனங்காட்டும் வகையில் இந்த ஆப்ளிகேஷன் அமைந்துள்ளது. பேஸ்புக் வலையமைப்பில் அதிகளவு ஈடுபாட்டை கொண்டுள்ள ஃபஷன்பக் சுமார் 115,000 Fanகளுடன் தொடர்பாடல்களை பேணி வருகிறது.
1994ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த இந்த நிறுவனம், ஆரம்பத்தில் 15 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்தது. இன்று 17 காட்சியறைகளை கொண்டுள்ளதுடன், இவற்றில் 1200க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் முன்னணி ஆடை அலங்கார விற்பனையகமாக திகழும் இந்த நிறுவனம், 'வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல்' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
கம்பனியின் நோக்கம், சமூகத்துக்கு உயர்தர பொருட்களையும் சேவைகளையும் சகாய விலையில் வழங்குவதற்காக தமது சொந்த வர்த்தக நாமங்களில் அமைந்த தயாரிப்புகளை, மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை தன் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், தொழில்புரியும் ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது.