2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ரிச்லைஃப் டைரீஸின் பால் சேகரிப்பு வலையமைப்பு அதிகரிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிய (டெட்ரா) பைக்கற்களில் திரவப் பசும்பாலை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கின்ற ரிச்லைஃப் டைரீஸ் லிமிட்டெட் நிறுவனம், தனது பால் சேகரிப்பு வலையமைப்பினை நாடெங்கும் உள்ள 5,000 இற்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களை உள்ளடக்கியதாக அதிகரிப்புச் செய்துள்ளது.

ரேணுகா ஷோ வல்லஸ் பி.எல்.சி. இனது ஒரு உறுப்பு நிறுவனமான ரிச்லைஃப் டைரீஸ் லிமிட்டெட்டின் அடிப்படை நோக்கம் நாடு முழுவதிலும் உள்ள10ர் பாற் பண்ணையாளர் வலையமைப்பை விஸ்தரிப்பதாகும்.

கலஹா, கிரிந்திவெல, தம்புள்ளை, நிக்கவெரட்டிய, ஹொரணை, பண்டாரகம மற்றும் வாதுவ ஆகிய இடங்களில் ஏழு பால் சேகரிப்பு மற்றும் குளிரூட்டல் நிலையங்களை கொண்டியங்கும் இக்கம்பனியானது, 5,000இற்கும் அதிகமான விவசாய  குடும்பங்களிடமிருந்து அரசாங்க நிர்ணய விலையில் வருடத்தின் 365 நாட்களும் தூய பாலினை கொள்வனவு செய்வதன் ஊடாக அக்குடும்பங்களுக்கு நேரடியாக உதவி அளிக்கின்றது.

அதேநேரம் பால் சேகரிப்பு நடவடிக்கையானது மெல்சிரிபுர, கொக்கரல்ல மற்றும் மத்துகம போன்ற இடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன் அவ்விடங்களில் சேகரிக்கப்படும் பால், பாதுகாப்பான கொள்கலன் தாங்கிகளின் மூலம் அருகிலுள்ள சேகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. அதன்மூலம், பாலின் புதிதுமாறாத் தன்மை எந்த நேரத்திலும் பேணப்படுவது உறுதி செய்யப்படுகின்றது.

"ரிச்லைஃப் டைரீஸ் மூலமாக நாம் அடைய நினைக்கின்ற இலக்கு, இன்று நடைமுறையிலுள்ள பேரினப் பொருளாதார சூழலின் அனைத்து காரணிகளையும் கவனத்தில் எடுத்து செயற்படும் விதத்தில் மிகவும் தெளிவானதாக உள்ளது" என்று பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான டினேஸ் நல்லையா தெரிவித்தார்.

"2014ஆம் ஆண்டின் முற்பகுதியில் மேலும் 1000 பால் பண்ணையாளர்களை இணைத்துக் கொள்வதன் ஊடாக எமது 'வெளிவள சேவை வழங்கல்' வலையமைப்பை விஸ்தரிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய கேள்வியை எதிர்கொள்வதற்கான ஆற்றலை இது எமக்கு அளிக்கும்.

அதுமாத்திரமன்றி உள்ளூர் கால்நடைத் துறையை அபிவிருத்தி செய்தல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் மிக முக்கியமாக 2016ஆம் ஆண்டில் உள்ளளூர் பால் உற்பத்தியில் இலங்கையை 100% தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றியமைத்தல் ஆகியவை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னெடுப்புக்களுக்கு ஒத்திசைவான முன்முயற்சியாகவும் இது அமைகின்றது.

இலங்கையின் பாற்பொருள் உற்பத்தியாளர்கள் என்ற வகையில் ரிச்லைஃப் டைரீஸ் நிறுவனமானது, இந்த தூரநோக்கை நிதர்சனமாக்குவதில் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட அபிவிருத்தியைத் தொடர்ந்து, கால்நடை பண்ணைகள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் இதுகாலவரைக்கும் நாம் பயன்படுத்தியிராத அப்பகுதிகளுக்கு பாற்பண்ணை விவசாயிகளின் வலையமைப்பை விஸ்தரிப்பதற்கான மேலும் பல வாய்ப்புக்கள் இப்போது கிடைக்கக் கூடியதாகவுள்ளன. இவ்வாறான முன்னெடுப்புக்களில் ரிச்லைஃப் டைரீஸ் நிறுவனம் எப்போதும் முன்னிலை வகித்து செயற்படுகின்றது.

கம்பனி வகுத்துள்ள திட்டங்களில் மேலும் உள்நோக்கங்களை உள்வாங்கும் விதத்தில் டினேஸ் நல்லையா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையின் முன்னணி உணவு மற்றும் குடிபான உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று என்ற வகையில், இலங்கை முழுவதிலும் உள்ள விவசாயக் குடும்பங்களுடன் நாம் கொண்டுள்ள உறவு பரந்துபட்டதும், நீண்டகால அடிப்படையிலானதுமாகும்.

கடந்த நிதியாண்டில் பசும்பால் மற்றும் ஏனைய விவசாய உற்பத்திகளை கொள்முதல் செய்ததன் மூலம் ரூபா 01 பில்லியனை நாம் கிராமப்புற பொருளாதாரத்திற்கு பங்களிப்பாக வழங்கி இருக்கின்றோம்.

தத்தமது பண்ணைகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்ற விவசாயிகளுக்கு கல்வி அறிவு புகட்டுவதன் ஊடாக எமக்கிடையேயான இந்த உறவினை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை நாம் ஆரம்பித்துள்ளோம். இதன் காரணமாக நாம் மேலும் அதிகமான நாட்டுப்புற மக்கள் பிரிவினரை சென்றடைவதுடன், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி வழங்கவும் முடியும். இலங்கையின் மிகப் பெரிய 'ஊடுபயிர் சேதன சான்றுபடுத்தப்பட்ட' பாற்பண்ணை என்ற வகையில் ரிச்லைஃப் டைரீஸ் பண்ணைகளுக்கு நாளாந்தம் தேவைப்படுகின்ற பசும்பாலின் அளவையும் நாம் அதிகரித்த வண்ணமுள்ளோம்' என்றார்.

இதுபோன்ற 'பாற்பொருள் மைய' கருத்திட்டங்கள் பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை மிகவும் வெற்றிகரமானவை எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்பு என்னவென்றால், இது கிராமப்புற பெண்களுக்கு வலுவூட்டியமை ஆகும். ரிச்லைஃப் டைரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தினராகிய நாமும் இப்பண்பை எமது வலையமைப்பு முழுவதிலும் விஸ்தரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்' என்று நல்லையா மேலும் குறிப்பிட்டார்.

ரிச்லைஃப் டைரீஸ் நிறுவனமானது 'ரிச்லைஃப் கிரிபெனி' என்ற பெயரில் புத்தாக்க தொடரிலான புதிய யோகட் ஒன்றை அண்மையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம், கிராமப்பபுற விவசாயிகளுக்கு உதவும் தனது செயற்பாட்டில் இன்னுமொருபடி மேலே சென்றுள்ளது. இது கலப்பின யோகட் மற்றும் கித்துள் கலவையை ஒன்றாக கொண்டதாகும். இந்த யோகட்டின் சுவையானது மிகவும் தனிச் சிறப்புமிக்கதாக காணப்படுகின்ற போதிலும், இலங்கையரினால் விரும்பப்படும் அசல் சுவையையும் தன்னகத்தே பேணுகின்றன.

ரிச்லைஃப் டைரீஸ் நிறுவனத்தின் பாலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளான சிறிய (டெட்ரா) பைக்கற்றுகளில் அடைக்கப்பட்ட திரவ பசும்பால், சுவையூட்டப்பட்ட பசும்பால், யோகட் வகைகள், தயிர் மற்றும் நெய் போன்றவை நாடெங்குமுள்ள அனைத்து பலசரக்குக் கடைகள் மற்றும் சுப்பர் மார்க்கட் விற்பனை நிலையங்களிலும் இப்போது எளிதாக கிடைக்கக் கூடியதாகவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .