
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வர்த்தக பங்காளரும் கணினி உற்பத்தி துறையின் ஜாம்பவானுமான EWIS நிறுவனம் இலங்கையின் முதலாவது கணினி உற்பத்தி நிலையத்தை ஹம்பாந்தோட்டை சூரியவௌவில் ஆரம்பித்துள்ளதுடன் இலங்கை ஆசியாவின் தொழில்நுட்ப மையமாக திகழவேண்டும் என்ற மஹிந்த சிந்தனைக்கு அமையவே இதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் கிழக்கு பிராந்திய வலய நாடுகளுக்கு தேவையான கணினிகளை உற்பத்தி செய்வதே பிரதான நோக்கமாக அமைந்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையத்தில் டெப்லட், லெப்டொப், டெஸ்க்டொப் கணினிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
கடந்த மாதம் நிலையத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பமானதுடன் கிராமப்புறங்களை சேர்ந்த 250 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான காரணியாகவும் இது அமைந்தது.
புதிய உற்பத்தி நிலையம் தொடர்பாக கருத்து தெரிவித்த EWIS நிறுவனத்தின் பொது முகாமையாளர் ராஜித்த டி சில்வா, சரியான ஆய்வுகளிலும் தொழில்நுட்ப அபிவிருத்தியிலும் நாம் எப்போதும் முதலீடுகளை மேற்கொள்கின்றோம். இப்புதிய நிலையமும் அதற்கு சான்று பகருகின்றது. கல்வியை மையப்படுத்தியே எமது நடவடிக்கைகள் அமைந்துள்ளதால் அரசாங்கத்தின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு எம்மால் உதவ முடியும். இதன்மூலம் 21ஆம் நூற்றாண்டுக்கான சிறந்த மாணவர் சமுதாயத்தை கட்டி எழுப்பலாம். அத்துடன் சூரியவௌ கணினி உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கணினிகள் அரச துறைக்கும் பாடசாலைகளுக்கு வழங்கப்படும். மைக்ரோசொப்ட் மென்பொருட்கள் தொடர்பான தெளிவான எண்ணங்களை உள்ளுர் மாணவர்களுக்கு அறிந்துகொள்ள வாய்ப்பும் இதன்மூலம் கிடைக்கின்றது என்றார்.
மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவின் OEM பணிப்பாளர் பூஜித்த ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கையில் ஈவிஸ் நிறுவனம் இலங்கையில் முதலாவது கணினி உற்பத்தி மையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. இவர்களுக்கு தேவையான மென்பொருள் உதவிகளை வழங்க மைக்ரோசொப்ட் நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.