
மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வர்த்தக பங்காளர்களுக்கான வருடாந்த சம்மேளனம் நாளை 13ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவின் வர்த்தக பங்காளர்கள் வருடாந்தம் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் மீளாய்வு செய்யப்பட்டு அவர்களில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்படும்.
வர்த்தக பங்காளர், விநியோகத்தர்கள் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மைக்ரோசொப்ட் நிறுவனம் விருதுகளை வழங்கும். பல்வேறு பிரிவுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது. இதன்போது உயர்ரக தரத்திலான சேவை வழங்குதல் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்தப்படும். நாடுமுழுவதிலுமுள்ள முன்னிலை தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பங்காளர்களாக பணியாற்றுகின்றனர். டெக் வன் குளோபல், சிலியன், எச் வன், மிலேனியம் ஐ.டி, எனெபல், ட்ரய்டன்ட் ஆகிய நிறுவனங்கள் மைக்ரோசொப்பட்டின் முன்னிலை பங்காளர்களாக விளங்குகின்றனர்.
'மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் தம்மைப்போன்றே தமது பங்காளர்களின் வர்த்தக நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் மூன்றாண்டு காலத்தில் மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் துரித வளர்ச்சியை எதிர்பார்க்கின்றது. பங்காளர்களின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அடிக்கடி புதுப்பொழிவு பெறுவதால் பங்காளர்களுக்கும் அபிவிருத்தி அடைவதற்கு சந்தரப்பம் கிட்டுகின்றது' என மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் விதிவிட முகாமையாளர் இம்ரான் வில்காசிம் தெரிவித்தார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பங்காளர்களால் பாரிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது. பங்காளர்களுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கும் இடையில் காணப்படும் உறவை மேலும் பலப்படுத்துவதே சம்மேளனத்தின் முக்கிய நோக்கமாகும்.