.jpg)
-ச.சேகர்
வாரத்தின் முதல் மூன்று தினங்களிலும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்த போதிலும், வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை நடவடிக்கைகள் சடுதியான அதிகரிப்பு அவதானிக்க முடிந்தது. அமெரிக்காவின் பெடரல் கொள்கைகளில் பரந்த கொள்கையை தொடர்ந்தும் பேணுவது குறித்த தீர்மானம் வெளியானதை தொடர்ந்து, கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் சூடுபிடித்திருந்தன. முதலீட்டாளர்கள் சந்தை நடவடிக்கைகளில் அதிகளவு ஆர்வம் செலுத்தியிருந்தனர். வியாழக்கிழமை போயா விடுமுறை காரணமாக பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,814.10 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3217.60 ஆகவும் அமைந்திருந்தன.
செப்டெம்பர் 16ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,146,276,514 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 21,160 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 20,346 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 814 ஆகவும் பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
கடந்த வாரம் சந்தையில் காணப்பட்ட உயர்வான போக்கு திங்கட்கிழமை குறைவடைந்த நிலையில் காணப்பட்ட போதிலும், ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்களவு உயர் பெறுமதிகள் பதிவாகியிருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் இன்றைய தின மொத்தப்புரள்வு பெறுமதியில் 72% பங்களிப்பை வழங்கியிருந்தன. ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் செயற்பாடுகளில் கலப்பான ஆர்வம் காணப்பட்டதுடன், லங்கா ஐஓசி பங்குகள் மீது சிறியளவான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகளவில் காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை
ப்ளுசிப் கம்பனிகள், கார்சன் கம்பர்பட்ச் மற்றும் கார்கில்ஸ் பங்குகள் சரிவை எதிர்நோக்கியிருந்ததன் காரணமாக இரு பிரதான சுட்டிகளும் மறை பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் பெருமளவில் கைமாறியிருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த நிறுவன பங்குகளை அதிகளவில் விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தனர். மொத்தப்புரள்வு பெறுமதியில் இந்த கொடுக்கல் வாங்கல்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை செலுத்தியிருந்தன. ஒரியன்ட் காமன்ட்ஸ் 10 வீதமான பங்குகளை மே.பா. அடெம் இன்வெஸ்ட்மன்ட்ஸ் லிமிடெட் கொள்வனவு செய்திருந்ததாக கொழும்பு பங்குச்சந்தை அறிவித்திருந்தது.
புதன்கிழமை
தொடர்ச்சியான இழப்புகள் பதிவாகியிருந்த போதிலும், சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் போது, 5,700 எனும் புள்ளியை விட சற்று அதிகரித்து பூர்த்தியடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளை கொள்வனவு செய்வதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். இதேவேளை 14.8 வீதமான நு –செனலிங் பங்குகள் உள்நாட்டவர்களிடமிருந்து, வெளிநாட்டவர்களுக்கு கைமாறியிருந்தது. மேலும், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் சம்பத் வங்கி போன்ற பங்குகள் மீதும் அதிகளவு செயற்பாடுகள் காணப்பட்டது. ஒரியன்ட் காமென்ட்ஸ், டச்வுட் இன்வெஸ்ட்மன்ட் மற்றும் நேஷன் லங்கா ஃபினான்ஸ் போன்ற பங்குகளில் சிறியளவான செயற்பாடுகள் காணப்பட்டது.
வெள்ளிக்கிழமை
அமெரிக்காவின் பெடரல் கொள்கைகளில் பரந்த கொள்கையை தொடர்ந்தும் பேணுவது குறித்த தீர்மானம் வெளியானதை தொடர்ந்து, கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் சூடுபிடித்திருந்தன. முதலீட்டாளர்கள் சந்தை நடவடிக்கைகளில் அதிகளவு ஆர்வம் செலுத்தியிருந்ததுடன், அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 113.56புள்ளிகள் அதிகரித்து 5814.10 ஆக நிறைவடைந்திருந்தது. S&P SL 20 சுட்டெண் 60.22 புள்ளிகள் அதிகரித்து 3217.60 ஆக அமைந்திருந்தது.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஆலுஃபாப், சிலோன் லெதர்(உரிமைப்பங்குகள்), செலின்சிங், ப்ளுடயமன்ட்ஸ் மற்றும் நேஷன் லங்கா போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
பீசி ஹவுஸ், சிஐஎஃப்எல், டச்வுட், டெஸ் அக்ரோ மற்றும் செரன்டிப் என்ஜி.குரூப் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 46,700 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 42,800 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 133.84 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 215.33 ஆக காணப்பட்டிருந்தது.