.jpg)
-ச.சேகர்
பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் கடந்த வாரம் கலந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் உயர்வான பெறுமதியை பதிவு செய்வதற்கு காரணமாக அமைந்திருந்ததுடன், வெள்ளிக்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது புக்கிட் தாரா பங்குகள் பங்குசந்தை சரிவடைய காரணமாக அமைந்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,954.36 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3280.33 ஆகவும் அமைந்திருந்தன.
ஒக்டோபர் 28ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,568,955,119 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 32,137 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 31,135 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,002 ஆகவும் பதிவாகியிருந்தன.
திங்கட்கிழமை
சந்தை கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் நிறைவடைந்ததுடன், பிரதான சுட்டிகள் இரண்டும் மறை பெறுமதியை பதிவு செய்திருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதி 372 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. டோக்கியோ சீமெந்து மற்றும் லங்கா ஐஓசி ஆகிய பங்குகள் மீது கலந்த ஆர்வம் காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் பெருமளவு பங்கு விற்பனையில் ஆர்வம் செலுத்தியிருந்தனர். இதேவேளை PCH ஹோல்டிங்ஸ் மற்றும் டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது சிறியளவான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை
சந்தை கொடுக்கல் வாங்கல்கள் சரிவுப் பெறுமதிகளுடன் நிறைவடைந்ததுடன், நெஸ்லே மற்றும் கார்கில்ஸ் பங்குகள் விலைச்சரிவை பதிவு செய்திருந்தன. வெளிநாட்டவர்கள் பெருமளவு கொமர்ஷல் வங்கி பங்கு விற்பனையில் ஆர்வம் செலுத்தியிருந்தனர். இந்த பங்குகளின் மொத்த விற்பனை மொத்தப்புரள்வு பெறுமதியை அரை மில்லியன் ரூபாவாக பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தது. இதேவேளை PCH ஹோல்டிங்ஸ் மற்றும் ஃப்ரீ லங்கா கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
புதன்கிழமை
சந்தை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ச்சியான இரு தினங்கள் சரிவுப் பெறுமதிகளுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து நேர் பெறுமதியை பதிவு செய்திருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி, நெஸ்லே லங்கா மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இதில் பங்களிப்பை வழங்கியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு டயலொக் ஆக்சியாடா பங்குகள் மீது கவனத்தை செலுத்தியிருந்தனர். மொத்தபுரள்வு பெறுமதியில் 50%க்கு மேற்பட்ட பங்களிப்பை டயலொக் ஆக்சியாடா பங்குகள் வழங்கியிருந்தன. இதேவேளை, லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி பங்குகள் மீதும் உயர் நிகர பெறுமதியான ஈடுபாடுகளை அவதானிக்க முடிந்தது. பீசி ஹவுஸ், லங்கா ஐஓசி ஆகிய நிறுவன பங்குகள் மீதும் ஈடுபாட்டை அவதானிக்க முடிந்தது. லங்கா ஐஓசி பங்குகள் மீதும் அதிகளவு ஈடுபாடு காணப்பட்டதுடன், பிசிஎச் ஹோல்டிங்ஸ் மற்றும் டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் ஆகிய பங்குகள் மீதும் குறிப்பிடத்தக்களவு கவனம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை
சந்தையில் உயர்வு பெறுமதிகளில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கார்சன் கம்பர்பட்ச் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பங்களிப்பை வழங்கியிருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் லயன் பிரிவெரி ஆகிய பங்குகள் மொத்தமாக கைமாறப்பட்டிருந்ததுடன், மொத்தப்புரள்வு பங்குகளிலும் பங்களிப்பை செலுத்தியிருந்தன. பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகள் மீது தொழில்சார் ஈர்ப்பு அவதானிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் லங்கா சென்ச்சரி இன்வெஸ்ட்மன்ட்ஸ் (முன்பு என்வயர்ன்மன்டல் றிசோர்சஸ்) ஆகிய பங்குகள் மீதும் சிறியளவிலான முதலீட்டாளர்களின் கவனம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை
மொத்தப்புரள்வு பெறுமதி பில்லியன் ரூபாவை விட அதிகரித்து பதிவாகியிருந்தது. பிரதானமாக லங்கா டைல்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதான மொத்த வியாபாரத்தின் காரணமாக. இதற்கு மத்தியில் இரு சுட்டிகளும் கார்சன் கம்பர்பட்ச் மற்றும் புக்கிட்தாரா ஆகிய பங்குகள் மீதான விலைச்சரிவுகள் காரணமாக சரிவை பதிவு செய்திருந்தன. இதேவேளை, லங்கா வோல்டைல்ஸ் 13.59மூ லங்கா டைல்ஸ் பங்குகளின் உரிமையாண்மையை தான் பெற்றுள்ளதாக அறிவித்திருந்தது. மொத்தப்புரள்வு பெறுமதியில் 50வீதத்துக்கும் அதிகமான தொகையை பங்களிப்பாக வழங்கியிருந்தது. வெளிநாட்டவர்கள் நிகர கொள்வனவாளர்களாக திகழ்ந்ததுடன், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது இவர்களின் ஆர்வம் காணப்பட்டது. மேலும், சிறியளவிலான முதலீட்டாளர்கள் டச்வுட் இன்வெஸ்ட்மன்ட் மற்றும் தங்கொடுவ போர்சலேன் ஆகிய பங்குகள் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் லங்கா சென்ச்சுரி (உரிமை), செரன்டிப் என்ஜி.கோர்ப்., லங்கா சென்ச்சுரி (உரிமை), எஎஸ்எம்பி லீசிங் மற்றும் ஒஃபிஸ் எக்யுப்மன்ட் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
செரன்டிப் லான்ட், கலாமசூ, சிஐரி, எஎஸ்எம்பி லீசிங் மற்றும் யூனியன் கெமிக்கல்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 45,200 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,400 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.57 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 213.18 ஆக காணப்பட்டிருந்தது.