.jpg)
வாரத்தின் முதல் நாள் கொடுக்கல் வாங்கல்கள் மந்த கதியில் இடம்பெற்றிருந்ததுடன், வருடத்தில் பதிவாகிய ஆகக்குறைந்த இரண்டாவது மொத்தப்புரள்வு தொகை நேற்றைய தினம் பதிவாகியிருந்தது.
சிலோன் டொபாக்கோ பங்குகளின் மீதான வருமானம் பங்குச்சந்தை செயற்பாடுகளில் ஓரளவு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி ஆகிய பங்குகள் மீது அதிகளவு ஆர்வம் காணப்பட்டது. எயிட்கன் ஸ்பென்ஸ் பங்குகள் மீது வெளிநாட்டவர்களின் ஈடுபாடு காணப்பட்ட போதிலும், சிறியளவிலான பங்குதாரர்கள் பெருமளவு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை பன்முகத் துறை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், எயிட்கன் ஸ்பென்ஸ் மற்றும் றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பங்களிப்புடன்) இந்த துறை 0.43% சரிவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 0.90 ரூபாவால் (0.41%) சரிவடைந்து 218.50 ரூபாவாக பதிவாகியிருந்தது. எயிட்கன் ஸ்பென்ஸ் பங்கொன்றின் விலை 0.40 ரூபாவால் (0.35%) உயர்ந்து 114.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.
வெளிநாட்டு உரிமையாண்மை 119,250 பங்குகளால் அதிகரித்திருந்தது. றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பங்கொன்றின் விலை 6.50 ரூபாவாக மாற்றமின்றி நிறைவடைந்திருந்ததுடன், வெளிநாட்டு உரிமையாண்மை 1,500,000 பங்குகளால் சரிவடைந்திருந்தது.
ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் டோக்கியோ சீமெந்து ஆகிய பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் உயர்ந்த பங்களிப்பை வழங்கியிருந்தன. ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 0.20 ரூபாவால் (1.31%) உயர்வடைந்து 15.50 ரூபாவாக பதிவாகியிருந்தது. டோக்கியோ சீமெந்து பங்கொன்றின் விலை 0.10 (0.38%) உயர்வடைந்து 26.50 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.