2026 மே 07, வியாழக்கிழமை

dd

ஹேமாஸ் 'அபிமான' முன்னெடுப்பு

A.P.Mathan   / 2014 ஜூன் 13 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. தனது கம்பனி முழுவதும் ஒரு வாழ்க்கைமுறை போக்கை (Lifestyle) நிலைபேணச் செய்யும் பொருட்டு 'அபிமான' எனும் முன்னெடுப்பு திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது. பொறுப்புடன் வாழ்கின்ற வாழ்க்கை ஒன்றிலிருந்து மட்டுமே தோற்றம் பெறக்கூடிய ஆழமானதும் உள்ளார்ந்ததுமான கண்ணியம் மற்றும் பெருமை தொடர்பில் ஒவ்வொரு ஊழியருக்கும் ஊக்கமளிப்பதற்காக - ஒவ்வொரு நடவடிக்கையுடனும் பொறுப்புணர்வு மற்றும் நிலைபேண்தன்மை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் விதத்தில் ஹேமாஸ் நிறுவனம் இந்த கூட்டாண்மை சமூகப் பொறுப்பு செயற்றிட்டத்திற்கு தலைமைதாங்கி வழிநடாத்துகின்றது.

இது தொடர்பான சம்பிரதாயபூர்வ அறிவிப்பு உள்ளடங்கிய 'சன்னச' அல்லது காகிதச்சுருள் பேழையை ஹேமாஸ் குழும நிலைபேண்தன்மை மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் பிரிவு தலைமை அதிகாரி சிரோமி மசக்கோரள, பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் இன்டர்பை அவர்களிடம் வைபவ ரீதியாக வழங்கி வைத்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. குறிப்பாக பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், முகாமைத்துவ உயரதிகாரிகள், முக்கியமான பங்குதாரர்கள் மற்றும் ஹேமாஸ் தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ள துறைகளில் பணியாற்றும் அதிகளவான ஊழியர்களும்; இதன்போது கலந்து கொண்டனர்.

பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் இன்டர்பை தலைமையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இது பற்றி அவர் கூறுகையில், 'இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் கம்பனிகளுள் ஒன்று என்ற வகையில், 65 வருடங்களுக்கு முன்னர் எமது நிறுவனத்தை ஆரம்பித்தது முதற்கொண்டு நாம் கடைப்பிடித்து வருகின்ற 'பெறுமதிகளுக்கு' எம்முடைய சாதனைகளை காரணமாக்குகின்றோம். எமது ஸ்தாபகர்கள் கம்பனி தொடர்பில் ஒரு தூரநோக்கை கொண்டிருந்தனர். இப்பயணத்தில் 'பெறுமதிகள்' முக்கிய பங்கினை ஆற்றியிருக்கின்றன. ஹேமாஸ் நிறுவனத்தின் பிரதான பெறுமதிகளின் DNA (மரபணு) போன்று காணப்படுகின்ற 'அபிமான' ஆனது, பொறுப்புள்ள நிலைபேண்தகு சமூகத்தில் ஒன்றிணைந்து வாழும் மற்றும் பணியாற்றும் அனுபவத்தை மேம்பாடடையச் செய்கின்றது. எமது வர்த்தகங்களை பொறுப்புணர்வுமிக்க ஒரு கூட்டாண்மை நிறுவனமாக தொழிற்படுத்துவது மட்டுமன்றி, எமது வாழ்க்கையை எவ்வாறு வாழ்கின்றோம் என்ற விடயத்திலும் கவனம் செலுத்துவதன் மூலம் மிகவும் பரந்தளவில் இம்முயற்சியில் பங்குபற்றுவதையிட்டு நாம் மிகுந்த பெருமிதம் அடைகின்றோம். இப் பண்புகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கும் புதுமையான எண்ணங்கள் மற்றும் முன்னெடுப்புக்களின் ஊடாக மாற்றத்தை தூண்டுவதற்கு பங்களிப்புச் செய்யவும் எமது ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இது சக்தியளித்து, ஊக்கமளிக்கின்றது' என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது ஹேமாஸ் குழும நிலைபேண்தன்மை மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் பிரிவு தலைமை அதிகாரியான சிரோமி மசக்கோரள கூறுகையில், 'சமஸ்கிருதத்தில் 'அபிமான' என்ற சொல் 'பெருமை' என பொருள்படுகின்றது. அந்த வகையில், ஹேமாஸ்; தன்னை அர்ப்பணித்துள்ள பெறுமதிகளுக்கு சுயமாகவே விளக்கமளிப்பதாகவும் சித்தரிப்பதாகவும் இதனது அடையாளச் சின்னம் காணப்படுகின்றது. ஒரு நபர் இந்தப் பெறுமதிகளின் அடிப்படையில் வாழ்வாரேயானால், எந்தவொரு நிறுவனமும் நிலைபேண்தன்மையை அடைந்து கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமுள்ளது' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், 'கூட்டாண்மை நிலைபேண்தன்மை என்பது நிதிசார் வருமானத்தை பெற்றுக் கொள்வது மட்டுமன்றி, அதையும் தாண்டி சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழல்களில் வணிக நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்கின்ற அதேவேளை தம்முடைய செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூறுவனவாக இருக்கின்றனவா என்பது பற்றியதும் ஆகும். எமது கம்பனியின் பெறுமதிகளின் அடிப்படையில் வாழுமாறு உயர்மட்ட அதிகாரிகள் தொடக்கம் அலுவலக உதவியாளர்கள் வரை அனைத்து ஊழியர்களுக்கும் நாம் தொடர்ச்சியாக ஊக்கமளித்து வருகின்றோம். இது ஒரு வலுக்கட்டாயமான விதியல்ல, மாறாக செயல்நோக்கமுள்ள ஒரு வாழ்க்கைமுறைப் போக்காகும்' என்று தொரிவித்தார்.

இலங்கையின் முன்னணி கூட்டுநிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கின்ற ஹேமாஸ் குழுமமானது FMCG, சுகாதார பராமரிப்பு, போக்குவரத்து, விடுமுறைகால சேவைகள் மற்றும் மின்சக்தி பிறப்பாக்கம் போன்ற ஐந்து முக்கிய துறைகளை மையமாகக் கொண்டு தனது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .