
உடுதும்பர கலுகல் ஓய கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் அண்மையில் ஜனசக்தி விளையாட்டு மற்றும் நலன்புரி கழகத்தின் மூலம் 1 மில்லியன் ரூபா பெறுமதியான எழுது பொருட்கள் மற்றும் பாடசாலை காலணிகளை பெற்றுக்கொண்டனர்.
இந்த திட்டம் ஜனசக்தி நிறுவனத்தின் 20 ஆவது வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது விளையாட்டு மற்றும் நலன்புரி கழகத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டிற்கான பாடசாலையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான எழுதுபொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு சோடி பாடசாலை சப்பாத்து மற்றும் எழுதுபொருட்களை கொண்ட பாடசாலை புத்தகப்பை ஒன்றும் வழங்கப்பட்டிருந்தன. மேலும் நகலெடுக்கும் இயந்திரம், கணினிகள் மற்றும் மடிக்கணினிகளும் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
கலுகல் ஓய கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புக்கள் உள்ளதுடன், அங்கு சுமார் 193 மாணவர்கள் தினசரி 3 முதல் 4 கிலோமீட்டர்கள் வரை நடக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதில் 75% வீதமான மாணவர்களுக்கு அணிய சப்பாத்துக்கள் இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
'எமக்கு நிஜமான தேவையை கொண்ட பாடசாலைக்கே அன்பளிப்புகள் வழங்க வேண்டியிருந்தது. எழுதுபொருட்கள் மற்றும் காலணிகளுக்கான தேவை காணப்படுவதாக இப் பாடசாலை அதிபர் எம்மிடம் தெரிவித்திருந்தார். நாம் அங்கு சென்றிருந்த போது அங்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்று கூடியிருந்ததுடன், இந் நிகழ்வுக்காக விசேடமான இயற்றப்பட்ட பாடலொன்றை மாணவர்கள் பாடி எம்மை வரவேற்றமை ஆச்சரியமூட்டுவதாக அமைந்திருந்தது' என ஜனசக்தி விளையாட்டு மற்றும் நலன்புரி கழகத்தின் தலைவர் சரிந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
அனைத்து அன்பளிப்புகளும் ஜனசக்தி நிறுவன ஊழியர்களால் வழங்கப்பட்டதெனவும், கழகத்தின் மூலம் வெளி நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது திட்டம் இதுவெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
'காப்புறுதி வழங்குனர் எனும் ரீதியில், நாம் சமூகத்திற்கு சாதகமான பங்களிப்பை வழங்கி வருகின்றோம். பாடசாலை கல்வியை மேம்படுத்தவும், 2015 ஆம் ஆண்டில் பெற்றோரின் சிரமத்தை குறைக்கும் நோக்கில் நாம் வழங்கிய சிறிய பங்களிப்பிற்கு ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் நன்றி தெரிவித்தமையானது நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது. இந்த திட்டத்தின் வெற்றிக்காக, எதிர்காலத்தில் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம்' என பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
ஜனசக்தி நிறுவனம் கடந்த காலங்களில் சமூகத்திற்கு சேவையாற்றும் அதன் அர்ப்பணிப்பின் அங்கமாக, சிறுநீரக பரிசோதனை திட்டங்கள், இளம் கிராமிய மெய்வல்லுநர்களுக்கான அனுசரணை திட்டங்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் போன்ற பலவற்றை முன்னெடுத்துள்ளது. ஜனசக்தி நிறுவனமானது அண்மையில் கண் பராமரிப்பு அறக்கட்டளைக்கு நிதி சேகரிக்கும் முகமாக, 'Wishing Light' எனும் திட்டத்தை ஏற்பாடு செய்து கிராமிய பிரதேசங்களில் இலவச கண் பராமரிப்பு முகாம்களை நடாத்தியிருந்தது.




