.jpg)
2016ஆம் ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமையானது நடைமுறை சாத்தியமற்ற ஓர் இலக்காக அமைந்துள்ளதாக சுற்றுலாத்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நடப்பு 2013ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தமாக 1.25 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இந்த இலக்கு எய்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. இதேபோன்று, 2015ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் நிறைவேறுவது சந்தேகம் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த 2015ஆம் ஆண்டுக்கான இலக்கில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இலக்குகள் குறித்து ஹோட்டல் துறையை சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ”இந்த இலக்கு அறிமுகம் செய்யப்பட்ட போதே, 2016ஆம் ஆண்டளவில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவருவது என்பது நடைமுறை சாத்தியமற்ற ஓர் இலக்காக அமைந்திருந்தது. அதுபோலவே, இந்த இலக்கை எய்துவதற்கு, நேரிடயாக நுகர்வோரை (சுற்றுலாப்பயணிகளை) இலக்காக கொண்ட சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகளில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.