2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆதரவு கோரும் ஆடைத் தொழிற்துறை

S.Sekar   / 2021 ஜூன் 18 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாம் அலைத் தாக்கத்தினால் பொருளாதாரச் செயற்பாடுகள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இலங்கையின் ஆடை உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படும் சந்தைகள் மற்றும் வர்த்தக நாமங்களிடம் இலங்கையின் இணை ஆடைகள் உற்பத்தியாளர் சம்மேளனம் ஆதரவை கோரியுள்ளது.

திறந்த கடிதமொன்றை அனுப்பியுள்ள இந்த சம்மேளனம், அதில் நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலின் ஒவ்வொரு அலையின் போதும் ஆடை உற்பத்தித் துறை மாறுபட்ட பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தது.

முதல் இரு அலைத் தாக்கங்களின் போதும் உங்களின் ஓடர்கள் இரத்துச் செய்யப்பட்டதால் நாம் பாதிக்கப்பட்டோம். நீண்ட காலத்துக்கு கடன் வழங்குமாறு நீங்கள் கோரியிருந்தீர்கள். காலம் தாழ்த்தி ஓடர்களை வழங்குமாறு நீங்கள் கோரியிருந்த நிலையில், எமது செயற்பாடுகளை தக்க வைத்துக் கொள்ள நாம் சிக்கல்களை எதிர்கொண்டோம். இந்த சவால்களுக்கு மத்தியிலும், எமது பணியாளர்களையும் இணைத்து, நாம் செயலாற்றும் வர்த்தக நாமங்களுடன் கைகோர்த்து செயலாற்ற நாம் முன்வந்திருந்தோம்.

90 நாட்களிலிருந்து 180 நாட்கள் வரை கடன் கால எல்லையை நீடிக்குமாறு நீங்கள் மேற்கொண்டிருந்த கோரிக்கையை நாம் ஏற்றுக் கொண்டோம். இரத்துச் செய்யப்பட்ட பொருட்களின் மூலப்பொருட்கள் மீதான பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டோம். ஓடர்கள் நிறுத்தப்பட்டதால் எமது 350000 பணியாளர்களுக்கு பணி வழங்க முடியாத ஒரு சூழலுக்கு நாம் முகங்கொடுத்தோம்.

மூன்றாவது அலைத் தாக்கத்தில் நாம் எதிர்பாராத மாறுபட்ட விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். வக்சீன் விநியோகத்தில் உலகளாவிய ரீதியில் சமத்துவமின்மை நிலவுவதால், சில நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு வக்சீனேற்றப்பட்டு, தமது வழமையான வாழ்க்கை முறைகளுக்கு படிப்படியாக மீளத்திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில், நாம் மூன்றாம் அலைத் தாக்கம் காரணமாக 2 மாதங்களினுள் 130 சதவீத கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பை அவதானித்துள்ளதுடன், மரணங்களும் 239 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. சந்தையில் போதியளவு வக்சீன்கள் இன்மையால் நாம் தொடர்ந்தும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

இவ்வாறான சவால்கள் நிறைந்த சூழலில், எமது ஊழியர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்து, எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல இயலுமான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். இதனால் குறைந்தளவான பணியாளர்கள், அடிக்கடி தொழிற்சாலைகளை மூட நேரிடுகின்றமை போன்றவற்றுக்கு முகங்கொடுத்துள்ளோம். துரிதிர்ஷ்டவசமாக, இலங்கையுடன் போதியளவு பங்காண்மையை காணமுடியாததையிட்டு நாம் கவலை கொள்கின்றோம்.

இவ்வாறான நெருக்கடிான காலப்பகுதியில், உங்களின் ஆதரவை நாம் எதிர்பார்க்கின்றோம். நவநாகரீகத்துறையின் போக்கை நாம் புரிந்து கொண்டுள்ளதுடன், எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாலான தொற்றுப்பரவலினால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எமது ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களில் தங்கியிருக்கும் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும் எமக்கு உதவுங்கள். உங்களுக்கு பிரச்சனைகள் நிலவிய போது, நாம் உங்களுக்கு ஆதரவளித்திருந்ததை போன்று, தற்போது எமக்கு ஆதரவு தேவையான தருணமாக இது அமைந்துள்ளது. உங்களின் ஆதரவு எமக்கு தற்போது முன்னரை விட முக்கியமானதாக அமைந்துள்ளது.

இலங்கை திறந்த பொருளாதாரக் கொள்கையை பின்பற்ற ஆரம்பித்தது முதல், உங்களுடன் எமது துறை மேற்கொண்டிருந்த பங்காண்மைகளின் காரணமாக, எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழுமளவுக்கு எம்மை உயர்த்தியிருந்தது. இந்த எதிர்பார்ப்பில், இந்த நெருக்கடியான காலப்பகுதியில், உங்களின் ஆதரவையும், உதவியையும் நாம் எதிர்பார்த்துள்ளோம். என அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .