2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் கெளும் சேனநாயக்க, நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமனம்

Freelancer   / 2023 டிசெம்பர் 29 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்பிகோ இன்சூர்னஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதம அதிகாரியும், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் புகழ்பெற்ற நபருமான கலாநிதி. கெளும் சேனநாயக்க, நிறுவனத்தின் நிறைவேற்று, சுயாதீனமற்ற பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் பொறுப்பை கலாநிதி. சேனநாயக்க ஏற்றார். காப்புறுதித் துறையில் இவர் 40 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். 133 நாட்களில் இலங்கையில் Million Dollar Round Table (MDRT) அந்தஸ்தை எய்திய, இலங்கையின் காப்புறுதித் துறையில் இந்த அந்தஸ்தைக் கொண்டுள்ள முதலாவதும் ஒரே பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் பெருமையையும் இவர் கொண்டுள்ளார். ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி / பிரதம அதிகாரி எனும் பொறுப்புகளுக்கு அப்பால் இவர் ரிச்சர்ட் பீரிஸ் டிஸ்ரிபியுட்டர்ஸ் மற்றும் ரிச்சர்ட் பீரிஸ் ஃபினான்ஸ் கம்பனி ஆகியவற்றின் பணிப்பாளர் சபையில் பணிப்பாளராக கடமையாற்றுகிறார்.

1982 ஆம் ஆண்டு மேர்கன்டைல் கிரெடிட் லிமிடெட் நிறுவனத்தில் தேசிய காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பிரதம முகவராக தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இவர், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் இணைந்து, 27 வருட காலப்பகுதியில் உதவி பொது முகாமையாளர் எனும் நிலைக்கு உயர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து, AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தில் செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளராக இணைந்து கொண்டதுடன், அங்கு கடமையாற்றிய ஒரு தசாப்த காலப்பகுதியில், செயற்பாடுகளுக்கான பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் தவிசாளர் ரமல் ஜாசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. கெளும், நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளமை உண்மையில் எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொழிற்துறைக்கும் நிறுவனத்துக்கும் இவர் ஆற்றும் பங்களிப்பு என்பது வரவேற்கத்தக்கதுடன், நிறுவனத்தை உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இவரின் மூலோபாய தூரநோக்குடைய செயற்பாடுகள் அமைந்திருக்கும்.” என்றார்.

கலாநிதி. கெளும் சேனநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளமை உண்மையில் பெருமையாக உள்ளது. துரித, நிலைபேறான வளர்ச்சி, சவால்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்த சூழலில் நாம் இயங்குவது தொடர்பில் தூர நோக்குடைய திட்டங்களை நாம் கொண்டுள்ளோம்.” என்றார்.

தமது தொழில் வாழ்க்கையில், Munich Re, Hannover Re மற்றும் Reinsurance Group of America (RGA) போன்ற சர்வதேச மீள் காப்புறுதி நிறுவனங்களுடன் உறுதியான உறவுகளை இவர் கட்டியெழுப்பியுள்ளதுடன், உயர்மட்ட மூலோபாய மற்றும் செயற்பாட்டு நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளார்.  புதிய வியாபாரங்களுக்கு காப்புறுதி வழங்கல், காப்புறுதிதாரருக்கு சேவையாற்றல், உரிமைகோரல்கள், குழும ஆயுள் காப்புறுதி வழங்கல்கள், மீள்காப்புறுதி, தொடர்பு நிலையங்கள், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் பல்வேறு முக்கிய பிரிவுகளை கட்டியெழுப்புவது மற்றும் செயற்பாடுகளை நிர்வகிப்பது தொடர்பில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளார்.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி. சேனநாயக்க, Worldview Institute இலிருந்து வணிக முகாமைத்துவ டிப்ளோமாவைப் பெற்றுள்ளார். அத்துடன், அவுஸ்திரேலியா, University of Western Sydney இல் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். காப்புறுதித் துறைக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்பையும், இவரின் சாதனைகளையும் கௌரவித்து London University of Peace இனால் இவருக்கு வணிக முகாமைத்துவ கலாநிதிப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய இராஜ்ஜியம், ஜேர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், ஹொங் கொங், மலேசியா, தாய்லாந்து, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் காப்புறுதி பயிற்சிகளைப் பெற்றுள்ளதுடன், தமது தொழில் வாழ்க்கையில் 20,000க்கும் அதிகமான காப்புறுதி நிபுணர்களுக்கு இவர் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X