Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச. சேகர்
உலகப் பொரு ளாதாரத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல், உலக மக்களின் நாளாந்த செயற்பாடுகளை மாற்றியமைத்து வருகின்றது. இவ்வாறான மாற்றங்கள் தொடர்பில் நாம், தினசரி அறிந்து வரும் நிலையில், பொருளாதார ரீதியில் உலக வல்லரசாக அறியப்பட்ட அமெரிக்காவைப் பின்தள்ளி, அந்த நிலையைச் சீனா தனதாக்கியுள்ளது. இந்தத் தகவலை, சர்வதேச நாணய நிதியத்தின் ‘உலகப் பொருளாதார உற்பத்தி 2020 அறிக்கை’யின் ஊடாக, அறிய முடிந்துள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம், அமெரிக்காவைப் பின்தள்ளி, உலகின் மாபெரும் பொருளாதார வல்லரசாக சீனா தோற்றம் பெற்றுள்ளது.
ஆம்! நீங்கள் மேலே வாசித்ததை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஏனெனில், சர்வதேச நாணய நிதியத்தின் நம்பத்தகுந்ததும் பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகோலானதுமான, ‘கொள்முதல் வலு சரிநிகர்’ (Purchasing Power Parity -PPP) என்பதன் பிரகாரம், சீனாவின் பொருளாதாரம் 24.2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் பெறுமதி 20.8 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் பயன்படுத்தப்படும் ‘கொள்முதல் வலு சரிநிகர்’ கணிப்பீட்டின் ஊடாக, நீங்கள் கொண்டிருக்கும் பணத்தினூடாக, வெவ்வேறு நாடுகளில் எந்தளவு கொள்முதல்களை மேற்கொள்ள முடியும் என்பது உணர்த்தப்படுகின்றது.
பாரம்பரியமாக, மொத்த தேசிய உற்பத்தியைக் கணிப்பீடு செய்வதற்கு, சந்தைப் பரிமாற்ற வீத (MER - market exchange rates) முறையைப் பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்திய போதிலும், அந்த முறையால், அசல் பெறுமதிகள் பிரதிபலிக்கப்படுவதில்லை என, சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சந்தைப் பரிமாற்ற வீத முறை, அதிகளவு சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. ஏனெனில், பல நாடுகளின் நாணயங்களின் கொள்முதல் வலுவை, இது குறைத்துக் காண்பிக்கின்றது. இதன் காரணமாக, டொலர் பெறுமதியுடன் பல நாடுகள் ஒப்பிடப்படும் போது, குறைந்த பெறுமதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தன.
கொள்முதல் வலு சரிநிகர் சீராக்கத்துடன், சீனாவின் பொருளாதார விளைவை, அமெரிக்காவின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில், பாரியளவு வித்தியாசத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதாக, சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம், தனது அறிக்கை தொடர்பில் தெளிவாக இருப்பதுடன், ‘கொள்முதல் வலு சரிநிகர்’ ஊடாக, வெவ்வேறு பொருளாதாரங்களின் விலை மட்டங்களில் காணப்படும் வேறுபாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாக, பொருள்கள் விற்பனையாகும் விலையில், தமது சொந்த நாணயத்தைக் கொண்டு, ஒரு தேசத்தால் கொள்முதல் செய்யக்கூடிய அளவுகளை ஒப்பீட்டு ரீதியில் அறிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வு முகவர் அமைப்பும், தனது வருடாந்த தேசிய பொருளாதார மதிப்பீடுகளின் போது, சந்தைப் பரிமாற்ற வீதத்துக்குப் பதிலாக, கொள்முதல் வலு சரிநிகர் முறையைப் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மொத்தத் தேசிய உற்பத்தியை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ பரிமாற்ற வீத முறையின் ஊடாக, சீனாவின் உற்பத்தியைத் துல்லியமாக அளவிட முடியவில்லை. சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியை, உத்தியோகபூர்வ பரிமாற்ற வீதத்தினூடாகக் கணிப்பிடும் போது, சீனாவினதும் உலகினதும் உண்மை நிலையை விடக் குறைவான பெறுமதிகளை வெளிப்படுத்துகின்றன என, அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பாரம்பரிய முறைகளில் காணப்படும் தொடர்ச்சித்தன்மை இன்மை காரணமாக, நாணயப் பெறுமதிகள் சரியான மட்டத்தில் காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக, The Big Mac Index எனும் புதிய முறையைப் பொருளாதார வல்லுநர்கள் கண்டுபிடித்தனர்.
உண்மையில், அமெரிக்க டொலரைக் கொண்டு, அமெரிக்காவில் கொள்வனவு செய்யக்கூடிய பொருள்களுடன் ஒப்பிடுகையில், சீனாவில் இரட்டிப்பு மடங்கு பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியும்.
‘எக்கனொமிஸ்ட்’ சஞ்சிகையின் பிரகாரம், 2019ஆம் ஆண்டில், சீனாத் தொழிலாளர்களால் மொத்தமாக 99 ட்ரில்லியன் யுவான் பெறுமதியான பொருள்கள், சேவைகள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. அமெரிக்காவில் 21.4 ட்ரில்லியன் பெறுமதி எய்தப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டில், ஒரு டொலர் 6.9 யுவான்களாகக் காணப்பட்ட நிலையில், சராசரியாக, சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 14 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது. இது, அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது, மிகவும் குறைவான பெறுமதியாகவே காணப்பட்டது.
ஆனாலும், அமெரிக்காவில் ஒரு டொலரின் பெறுமதி என்பதை விட, சீனாவில் 6.9 யுவான்களின் பெறுமதி அதிகமாகும். உதாரணமாக, McDonald’s உணவகத்தின் ‘பிக் மெக்’ உணவுப் பொதியை எடுத்துக் கொண்டால், சீனாவில் இதன் பெறுமதி 21.70 யுவான்களாகும். அமெரிக்காவில் இதன் பெறுமதி 5.71 அமெரிக்க டொலர்களாகும்.
இவ்வாறாக, நாணயப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு கருதும் போது, அமெரிக்க டொலர் ஒன்றால் கொள்வனவு செய்யக்கூடிய பொருளை, 3.8 யுவான்களுக்குக் கொள்வனவு செய்ய முடியும். இந்தக் கணிப்பீட்டின் அடிப்படையில் நோக்கினால், 99 ட்ரில்லியன் யுவான்களைக் கொண்டு, 26 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கொள்முதல் செய்ய முடியும். எனவே, சீனாவின் பொருளாதாரம், அமெரிக்காவின் பொருளாதாரத்தை விட, விஞ்சியதாக அமைந்துள்ளது என, ‘எக்கனொமிஸ்ட்’ சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 30 வருட காலமாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதம், சராசரியாக 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது. உற்பத்தித் துறை, இதன் முதுகெலும்பாக அமைந்துள்ளது. தனது இராணுவ வலுவைக் கட்டியெழுப்பி உள்ளதுடன், உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு சாதனங்களையும் திரட்டியுள்ளது.
சீன நாட்டின் இராணுவம், தனது விரிவாக்க நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்து பின்பற்றிய வண்ணம் உள்ளதுடன், தனது உறுதியான பொருளாதாரப் பின்புலத்துடன், அண்மைய நாடுகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தியும் உள்ளது. இதற்குச் சிறந்த உதாரணமாக, இந்தியாவுடனான சமகால உறவுகளையும் அதன் விளைவுகளையும் குறிப்பிடலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளைக் கொண்டு, ‘ப்ளும்பேர்க்’ தனது சுயகணிப்பீடுகளை மேற்கொண்டிருந்தது. இதில், சீனாவால் உலகளாவிய ரீதியில் பதிவாகக் கூடிய வளர்ச்சி, 2021ஆம் ஆண்டில் 26.8 சதவீதமாகப் பதிவாகும் என்பதுடன், 2025ஆம் ஆண்டளவில் 27.7 சதவீதமாக உயர்வடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவால் எதிர்பார்க்கப்படும் சர்வதேச வளர்ச்சிகளுடன் ஒப்பிடுகையில், இது பெருமளவு அதிகரிப்பாகும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பீட்டின் பிரகாரம், அடுத்த ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் 8.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும். இது, ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட கணிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் ஒரு புள்ளி குறைவான போதிலும், உலகின் மொத்த வளர்ச்சியில், நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானதைத் தன்வசம் கொண்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகத்தின் பொருளாதார வல்லரசு சீனா என்பதை, உலகம் மறுக்க முடியாது. நாட்டின் வளர்ச்சி என்பது, துரிதமானதாக அமைந்திருந்த போதிலும், இந்தளவு விரைவில் இந்தப் பொருளாதார வல்லரசு எனும் நிலையை எய்தும் என்பதைப் பல நாடுகளும் எதிர்பார்க்கவில்லை.
சீனாவில் ஆரம்பமாக கொரோனா வைரஸ் பரவல், உலகத்தின் ஏனைய நாடுகளில், பொருளாதாரச் சிக்கல்களையும் பின்னடைவுகளையும் தோற்றுவித்திருந்த போதிலும், அந்தத் தொற்றுப் பரவல், சீனாவை மேலும் வலுவடையச் செய்துள்ளது.
ஏனெனில், இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அணியும் பெருமளவான முகக் கவசங்களும் பாதுகாப்பு அங்கிகளும் கூட, சீனாவிலிருந்து தான் வருகின்றன என்பது ஒரு சான்றாகும்.
10 minute ago
14 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
56 minute ago
1 hours ago