2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஊனமுற்ற சிறுவர்களுக்கான AYATI மையத்தின் அத்திபாரம்

Gavitha   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊனமுற்ற சிறுவர்களுக்கென பிரத்தியேகமான ஒரு மையத்தை நிறுவ வேண்டும் என்ற தேசிய கனவு நனவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. சர்வதேச ஊனமுற்றோர் தினத்தன்று AYATI - ஊனமுற்ற சிறுவர்களுக்கான சிறப்பு மையத தின் அத்திபாரம் இடும் வைபவரீதியான நிகழ்வு களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இடம்பெற்றுள்ளது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பீஎல்சி மற்றும் களனி பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றினால் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படவுள்ள இந்த மையத்துக்கான அத்திபாரமிடும் நிகழ்வில் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சரான ருவான் விஜேவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இலங்கை AYATI அறக்கொடை அமைப்பின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.  

AYATI என்ற பெயருக்கேற்ப ஊனமுற்ற சிறுவர்கள் தமது முழுமையான வளர்ச்சி வாய்ப்புக்களை அடையப்பெற்று, எமது சமூகத்துடன் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்டவர்களாக மாறுவதற்குத் தேவையான பல ஏற்பாட்டு வசதிகளை இந்த மையம் கொண்டிருக்கும். ராகம மருத்துவபீட மைதானத்தில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள 42,000 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட இந்த நவீன மையத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான ஆட்பலத்தை பாதுகாப்பு அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன், வழங்குவதற்கு இலங்கை கடற்படை முன்வந்துள்ளது.  

இந்த முன்னெடுப்பானது, ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேற்றியலுடனான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி எமது நாடு பயணிப்பதற்கு உதவும் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது. களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் ஊனம் தொடர்பான கற்கைகள் பிரிவு மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பீஎல்சி ஆகியன ஒன்றிணைந்து இந்த மையத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், அரசாங்கம், தனியார் துறை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களிடமிருந்து இதற்கு ஏற்​ெகனவே சிறந்த ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது.  

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு தொடர்பில் களனி பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதியும், இலங்கை AYATI அறக்கொடை அமைப்பின் தலைவருமான பேராசிரியர் நிலாந்தி டி சில்வா கருத்து வெளியிடுகையில், “ஊனமுற்ற சிறுவர்களுக்கான முதலாவது தேசிய மையத்துக்கான அத்திபாரத்தை நாம் இட்டுள்ள நிலையில், மிகவும் முக்கியமான, ஆனால் எமது நாட்டில் இது வரை புறக்கணிக்கப்பட்ட ஒரு விடயத்தை முன்னெடுக்க எமக்கு இடமளித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இந்த மையம், தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்த பின்னர், ஊனமுற்ற சிறுவர்களுக்கான ஆரம்ப கட்ட மதிப்பீடுகளுக்கான ஏற்பாட்டு வசதிகளை வழங்குவதுடன், பொருத்தமான தலையீட்டு சிகிச்சை, அடிப்படை தொழிற் பயிற்சி மற்றும் வாழ்க்கைத்திறன் கல்வியையும் வழங்கும்” என்று குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X