2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிறு வியாபாரங்களுக்கு கைகொடுப்பது எமது இலக்கு

S.Sekar   / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாட்டின் சிறிய, நடுத்தரளவு வியாபாரப் பிரிவு என்பதைப் பொறுத்தே அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை மதிப்பிடக்கூடியதாக இருக்கும். உதாரணமாக அபிவிருத்தியடைந்த நாடுகளை எடுத்துக் கொண்டால் சிறிய, நடுத்தரளவு வியாபாரப் பிரிவைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிகளவு வருமானமீட்டுகின்றன. ஆனாலும், இலங்கையை எடுத்துக் கொண்டால் எமது சிறிய, நடுத்தரளவு வியாபாரத் துறை பெருமளவு வருமானமீட்டுவதில்லை. எனவே, தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர் எனும் வகையில் இந்தத் துறையைச் சேர்ந்த வியாபாரங்களுக்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொடுத்து அவற்றின் வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என SLT-Mobitel இன் சிறிய, நடுத்தரளவு வியாபார ஊக்குவிப்புப் பிரிவின் பொது முகாமையாளர், சஞ்ஜீவ ஜயமஹா வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.

இலங்கையின் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் பெருமளவு முன்னேற்றத்துக்கு தடையாக இரண்டு காரணிகள் காணப்படுகின்றன. ஒன்று இலங்கையின் சந்தையளவு மிகவும் சிறியதாக காணப்படுகின்றது. மற்றையது அவ்வாறான வியாபாரங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைய முடியாமலிருப்பது. முதல் பிரச்சனைக்கு எம்மால் தீர்வு காண முடியாத போதிலும், தம்மைச்சூழவுள்ள குறிப்பிட்ட தரப்பினருக்கு மாத்திரம் விற்பனைகளை மேற்கொள்ளும் முறையை, டிஜிட்டல் தொழில்நுட்பம் மாற்றியமைத்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தினூடாக சிறியளவு வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவருக்குக்கூட நாட்டின் எப்பாகத்திலுமுள்ள வாடிக்கையாளரை சென்றடையக்கூடிய வசதி காணப்படுகின்றது.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், தொற்றுப் பரவலுடன் கடந்த ஆண்டில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மக்கள் மத்தியில் பெருமளவு அதிகரித்துள்ளது. பாரிய நிறுவனங்கள், நடுத்தரளவு வியாபாரங்கள் மூடப்பட்டிருந்த போதிலும், கிராமிய மட்டத்தில் இயங்கிய சிறு நிறுவனங்கள் தொடர்ச்சியாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததை நாம் அவதானித்தோம். இந்நிலையில், அந்த வியாபாரங்களுக்கு தமது வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கும் தொழில்நுட்பம் என்பது மிகவும் முக்கிய தொடர்புபடுத்தும் மூலமாக அமைந்திருந்தது.

இதன் காரணமாக, நாம் இந்தப் பிரிவைச் சேர்ந்த வியாபாரங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்திருந்தோம். தற்போதும் வீடுகளிலிருந்து பணியாற்றுவோர், கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவும் வகையில் எமது Fibre வலையமைப்பை வீடுகளுக்கு விஸ்தரித்த வண்ணமுள்ளோம்.

இந்த சிறியளவு வியாபாரங்களுக்கு வலுச்சேர்ப்பது என்பது இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளது. இந்த வியாபாரங்கள் தொடர்ந்து நிலைத்திருப்பது என்பது, நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றும்.

தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர் எனும் வகையில், இவ்வாறான சிறியளவிலான வியாபாரங்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் பாரிய பொறுப்பைக் கொண்டுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொற்றுப் பரவலுடன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வாடிக்கையாளர்கள் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். சிறியளவில் இயங்கும் வாடிக்கையாளர்களும் இந்த வசதியைக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு நம்பகமான வகையில் சிறந்த சேவைகளை வழங்கவும், பெற்றுக் கொள்ளவும் அவசியமான தொழில்நுட்ப தீர்வை வழங்குவதில் நாம் கவனம் செலுத்தினோம்.

இவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கக்கூடிய உறுதியான செயலணியை நாம் கொண்டுள்ளோம். முழு நாட்டையும் எடுத்துக் கொண்டால் ஸ்ரீ லங்கா ரெலிகொம் சகல பிராந்தியங்களிலும் அலுவலகமொன்றைக் கொண்டுள்ளது. போதியளவு தொழில்நுட்ப ஆலோசகர்களைக் கொண்டுள்ளது. இவர்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை நாம் வழங்கியிருந்தோம்.

வாடிக்கையாளருக்கு நாம் இணைப்புகளை மாத்திரம் வழங்காமல், அவர்களுக்கு தமது வியாபார செயற்பாடுகளுக்கு அவசியமான சகல தீர்வுகளையும் நாம் வழங்குகின்றோம். இதற்காக நாம் பங்காளர்களுடன் கைகோர்த்து செயலாற்றுகின்றோம். வாடிக்கையாளர்களை முன்னேற்றும் வகையில் சகல தீர்வுகளையும் வழங்கும் அதேவேளை, நாம் அவர்களுக்கு விலைக்கழிவுகளையும் வழங்கியிருந்தோம் என்றார்.

உதாரணமாக வீட்டிலிருந்து பயிலல் முறையினூடாக நாட்டின் அம்பாறையிலுள்ள ஆசிரியருக்கு தற்போது கொழும்பிலும் மாணவர்கள் காணப்படுகின்றனர். முன்னர் அவ்வாறான நிலை இருக்கவில்லை. முன்னர் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கொழும்புக்கு அல்லது கம்பஹாவுக்கு வருகை தந்து முன்னணி ஆசிரியர்களின் வகுப்புகளில் கல்வியை தொடர வேண்டியிருந்தது. இது அதிகளவு அசௌகரியத்தை இரு சாராருக்கும் ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், தற்போது இந்த ஒன்லைன் வசதியினூடாக தமது இருப்பிடங்களில் இருந்தவாறே கல்வியைத் தொடரும் வசதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏற்படுத்த முடிந்துள்ளது.

எமது வலையமைப்பிலுள்ள மாணவர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு 200 ரூபாய் எனும் குறைந்த தொகைக்கு தமது முழுக் கல்வியையும் தொடரும் வசதியை நாம் ஏற்படுத்தியுள்ளோம். டேட்டா விலையை குறைத்துள்ளோம். அரசாங்கத்தின் கேள்வியும் இதுவே. மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்கு நியாயமான தீர்வை வழங்குமாறு எமக்கு கோரியிருந்தது. நாம் இதை நிறைவேற்றியுள்ளோம். அது போலவே, வீடுகளிலிருந்து பணியாற்றுவோருக்கும் சிறந்த டேட்டா தெரிவுகளை நாம் வழங்கியுள்ளோம்.

நடப்பு ஆண்டிலும் எமது சேவைகளுக்கான கட்டணங்களில் நிவாரணத்தை வாடிக்கையாளர்களுக்கு அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .