2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி நுவரெலியா விஜயம்

S.Sekar   / 2022 நவம்பர் 14 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், மிசுகொஷி ஹிதேகி, அண்மையில் நுவரெலியா மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, தூதுவர் மிசுகொஷி மற்றும் திருமதி. மிசுகொஷி ஆகியோர், ஸ்ட்ரத்ஸ்பே எஸ்டேட், மின்ன பிரிவில் நீர் வடிகட்டல் கட்டமைப்பொன்றை கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இங்கு தேயிலைப் பெருந்தோட்டங்களில் பணியாற்றும் சுமார் 770 பேர் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சுமார் 40 சதவீதமான தேயிலைப் பெருந்தோட்டப் பணியாளர்களுக்கு தூய நீருக்கான அணுகல் காணப்படாத நிலையில், இந்த தூய்மைப்படுத்தல் கட்டமைப்பினூடாக, இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிவாரணத்திட்டத்தினூடாக வழங்கப்பட்ட அவசர கால உணவுப் பொதி விநியோகிக்கையில், ராகல வத்தை பிரதேசத்தில் வசிக்கும் தேயிலைப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுடன் தூதுவர் மிசுகொஷி கலந்துரையாடியிருந்தார். இந்தப் பிராந்தியத்தில் வசிப்போரை தற்போதைய பொருளாதார நெருக்கடி எந்தளவு கடினமாக தாக்கியுள்ளது என்பது தொடர்பிலும், அவர்களின் சவால்கள் நிறைந்த சூழ்நிலைகள் தொடர்பான நேரடித் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு தூதுவர் மிசுகொஷிக்கு கிடைத்திருந்தது. இதில் பெரும்பாலானவர்கள் மலையகத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு சமூகத்தாரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தினூடாக, வருடாந்தம் 250 – 300 இளைஞர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையத்துக்கு தூதுவர் மிசுகொஷி விஜயம் செய்திருந்ததுடன், செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன் மற்றும் இதர இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தார். மலையகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடியிருந்தார். ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் இதர தொழில்நுட்பத் திறன்கள் தொடர்பில் நிலையத்தினால் வழங்கப்படும் பயிற்சிகளை தூதுவர் பாராட்டியிருந்தார்.

பெருந்தோட்ட தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வரலாறு மற்றும் தற்போதைய நிலை தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனுடனும் தூதுவர் கலந்துரையாடியிருந்தார். இந்தப் பிராந்தியத்தை நிலைபேறான முறையில் விருத்தி செய்யக்கூடிய வழிமுறைகள், தேயிலைப் பெருந்தோட்டங்களின் அழகு மற்றும் கலாசாரத்தைப் பேணுவது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் விளக்கமளித்திருந்தார்.

களனி வெலி பிளான்டேஷனுக்கான விஜயத்தின் போது, ஹேலீஸ் பிளான்டேஷன்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. ரொஷான் ராஜதுரையுடனும், இதர குழும நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தினூடாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் நிறுவனம் பின்பற்றும் புத்தாக்கமான கட்டமைப்பு தொடர்பில் தூதுவர் அறிந்து கொண்டார். அத்துடன், தேயிலைப் பெருந்தோட்ட ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் “வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் மாதிரி” முறைமை பற்றியும் அவர் அறிந்து கொண்டார். இந்த முறையினூடாக தொழிலாளர்களுக்கும் நிறுவனத்தின் உள்ளடக்கம் உணரச் செய்யப்படுவதுடன், அவர்களின் உற்பத்தித் திறன் மற்றும் தன்னிறை ஆகியவற்றை மேம்படச் செய்யும்.

இலங்கையின் நீண்ட காலப் பங்காளர் எனும் வகையில், இலங்கையின் நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்குவதுடன், சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும் பாதிக்கப்படாமலிருக்கும் வகையில் ஆதரவுகளை வழங்குகின்றது. இந்த வருடத்தில் மாத்திரம் ஜப்பானினால் சுமார் 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவியாக உடனடி, மத்திய கால மற்றும் நீண்ட கால உதவிகளாக வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை மக்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்து, மேலதிக வளர்ச்சிக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையின் பின்தங்கிய, பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் குறைந்த வசதிகள் படைத்த சிறுபான்மை இனத்தவர்கள் அடங்கலாக சகல மக்களுக்கும் தொடர்ச்சியான ஆதரவை வழங்க ஜப்பான் தன்னை அர்ப்பணித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .