2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

தெற்காசியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் - உலக வங்கி கணிப்பு

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, தெற்காசியப் பிராந்தியம் மோசமான நிதி நெருக்கடியை சந்திக்கும் என, உலக வங்கியின் அதிகாரி தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரம், 6.7 சதவீதத்தால் இந்த ஆண்டில் வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டார்.  

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, சுற்றுலாத் துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும், தெற்காசியாவிலும் இந்நிலையை அவதானிக்க முடிவதுடன், இந்நாடுகளின் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், துரிதமான மீட்சியை அவதானிக்க முடியாது என உலக வங்கியின் அதிகாரி குறிப்பிட்டார்.  

“சுற்றுலாத் துறையில் மீட்சியை உடனடியாக அவதானிக்க முடியாது. ஏனெனில் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளமை, முடக்க நிலை அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமை காரணமாக, சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்யத் தயக்கம் காண்பிப்பார்கள். குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்திலும், இலங்கை, மாலைதீவுகளிலும் இதை அதிகளவு அவதானிக்க முடியும்” என உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான பிரதம பொருளாதார வல்லுநர் ஹான்ஸ் டிம்மர் தெரிவித்தார்.  

“கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கான தடுப்பு மருந்துகள் பல தயாரிக்கப்பட்ட வண்ணமுள்ளன. இவை தயாரிக்கப்பட்டதும், அவற்றை பகிர்வதற்கு அதிகளவு திறன் காணப்பட வேண்டும். அரசாங்கங்களுடன் நாம் இவற்றை கொள்வனவு செய்வதற்கான திறனை மேம்படுத்துவது தொடர்பில் செயலாற்ற ஆரம்பித்துள்ளோம். எனவே, இந்தத் தடுப்பு மருந்து தயாரானதும், எம்மால் துரிதமாக செயலாற்றக்கூடியதாக இருக்கும்” என உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காஃவர் தெரிவித்தார்.  

அடுத்த ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடைந்து 3.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றும் 2022ஆம் ஆண்டில் 2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.  

தெற்காசியாவின் பொருளாதார நிலையில் கவனம் செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்தாண்டு காலமாக 6 சதவீதத்தை விட உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை, தெற்காசிய பிராந்தியம் பதிவு செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 7.7 சதவீத பொருளாதார சரிவைப் பதிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

முன்னைய பொருளாதார நெருக்கடிகளின் போது, முதலீடுகளின் இன்மை, ஏற்றுமதிகளில் வீழ்ச்சி போன்றன சரிவை ஏற்படுத்தியிருந்தன. இம்முறை இது மாறுபட்டதாக அமைந்துள்ளது. தெற்காசியாவின் பொருளாதார குறிகாட்டியில் முதுகெலும்பாகத் திகழும் தனியார் துறை, இவ்வாண்டில் 10 சதவீதத்துக்கும் அதிகமான சரிவை பதிவு செய்யும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வறுமை நிலை அதிகரிக்கும். வறுமை நிலையை மேலும் மோசமாக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்திலும் வீழ்ச்சி ஏற்படும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.  

தெற்காசியாவின் மூன்றில் ஒரு பகுதி பணியாளர்கள் முறைசாரா தொழிலில் தங்கியுள்ளனர். குறிப்பாக, விருந்தோம்பல், வியாபாரம், போக்குவரத்து போன்ற துறைகளில் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். இந்தத் துறைகள் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தின் காரணமாக, இந்த முறைசாரா தொழிலில் ஈடுபடுவோருக்கு எதிர்பாராத தாக்கங்கள் ஏற்படும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .