2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மிளகுச் செய்கை மறுமலர்ச்சி பெறுமா?

ச. சந்திரசேகர்   / 2020 மார்ச் 06 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருமளவு வீழ்ச்சி கண்டிருந்த மிளகின் விலை தொடர்பில், இலங்கை அரசாங்கம் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது. குறிப்பாக, இறக்குமதி செய்வதற்கு மிளகு தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும், மிளகின் விலை பெருமளவு வீழ்ச்சி அடைந்திருப்பதற்கான காரணங்களை, ஆராய்ந்து தெரியப்படுத்துமாறு அரசாங்கம் கோரியுள்ளது.  

மிளகின் விற்பனை விலை, பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளமையால் மிளகுப் பயிர்ச்செய்கையை, விவசாயிகள் கைவிட்டுள்ளனர். விவசாய ஏற்றுமதித் திணைக்களத்தால் மிளகுச் செய்கையாளர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும், மிளகுச் செய்கை என்பது, பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு அனுகூலமளிப்பதாக இல்லாமையால் மிளகுச் செய்கையைக் கைவிட்டுள்ளனர். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட, மிளகின் விலை வீழ்ச்சி கண்டிருந்தமை தொடர்பில், பரவலாகப் பேசப்பட்டிருந்தது. மிளகுச் செய்கையில் ஈடுபடும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், ஆட்சியில் இருந்தவர்களுக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், தமது வாக்கைப் பயன்படுத்தியிருந்தனர்.  

 சந்தையில் மோசமான விலை நிலவியதன் காரணமாக, கடந்த காலங்களில் மிளகுச் செய்கை எவ்வாறு வீழ்ச்சிகண்டது என்பதை, பயிரிடப்பட்ட நிலம், உற்பத்தி, உற்பத்தித்திறன் ஆகியவற்றுக்கமைய அட்டவணையில் காணக்கூடியதாகவுள்ளது.   

 மிளகின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கான காரணங்களை மட்டும் உள்வாங்காமல், மிளகுச் செய்கையில் ஈடுபடுவோருக்கு அனுகூலமளிக்கக்கூடிய வகையில், சந்தையை வலிமைப்படுத்தும் மூலோபாயத் திட்டங்கள் அடங்கலாக, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சமர்ப்பிக்கும்  அறிக்கையில் எதிர்பார்க்கப்படுகின்றது.பொது மக்கள்,  மிளகுச் செய்கையாளர்களின் அனுகூலம் கருதி, இந்த அறிக்கை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படுவது பயனளிப்பதாக அமைந்திருக்கும்.  

உலக சந்தையில், இலங்கையின் மிளகு மிகவும் புகழ்பெற்றிருந்தது. அதன் தரம், உயர்ந்த நறுமணம் போன்றன இதற்கு காரணங்களாகும். ஆனாலும், பெறுமதி சேர்க்கத் தவறிய காரணத்தால், கடந்த சில தசாப்தங்களில், உலக சந்தையில் இலங்கையின் மிளகுக்கு, உயர்ந்த விலையைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருந்தது.  

இலங்கையின் மிளகுக்கு, குறைந்த விலை காணப்பட்டதன் அனுகூலத்தை, வெளிநாடுகள் பயன்படுத்தி, குறைந்த விலையில் இலங்கையின் மிளகைக் கொள்வனவு செய்து, அதற்குப் பெறுமதி சேர்த்து, தமது சொந்த வர்த்தக நாமங்களில், உயர் விலைகளில் மீள விற்பனை செய்கின்றன. 

மிளகு வளர்ப்பாளர்களுக்கு மானியங்கள், பயிரிடல் மூலப்பொருட்கள், நீடிப்பு உதவிகள், உரங்கள் போன்றவற்றை வழங்குவதனூடாக விவசாய ஏற்றுமதித் திணைக்களம் உதவிகளை வழங்குகின்றது. ஆனாலும் விளைச்சல்களைச் சந்தைப்படுத்தும் போது உரிய உதவிகளை வழங்கத் தவறியுள்ளது.   

பதுளை, மொனராகலை, கண்டி,  இரத்தினபுரி மாவட்டங்களில் மிளகுச் செய்கை, இரண்டுவகை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாய ஏற்றுமதித் திணைக்களம் தெரிவிக்கின்றது. இது உள்நாட்டு மிளகுச் செய்கைக்கு, பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.    

 இந்தியா, வெளிநாடுகளிலிருந்து மிளகு இறக்குமதியை இடைநிறுத்தியிருந்ததைத் தொடர்ந்து, வாசனைத் திரவியங்கள், அவை சார்ந்த உற்பத்தியாளர்கள்,  விற்பனையாளர்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகரும் தவிசாளருமான குலாம் சட்டூர் தலையிட்டு, இலங்கையிலிருந்து மிளகு இறக்குமதி செய்யப்படும் போது, நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆகக்குறைந்த இறக்குமதி விலையான ஒரு கிலோகிராமுக்கு ரூ. 500 என்பதை நீக்கியிருந்தார். இது தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டிருந்தது  என நம்பப்படுகின்றது.  

 தற்போதைய ஜனாதிபதி, தமது தேர்தல் வாக்குறுதியில் மிளகு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான  தொழில்நுட்ப உதவி, குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதி, ஏற்றுமதி கிராமங்களை ஸ்தாபித்தல், மிளகுச் செய்கையை மேம்படுத்துவதற்கான சேவைகளை விஸ்தரித்தல் போன்றவற்றை வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆட்சிபீடமேறியதும், தமது வாக்குறுதிகளின் ஓர் அங்கமாக, மிளகு இறக்குமதியைத் தடை செய்திருந்தார்.  

 எவ்வாறாயினும், கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்தும் மிளகின் விலை, குறைந்த மட்டங்களில் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஏற்றுமதி அபிவிருத்தி சபையால், அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் மிளகு விலை தொடர்பான அறிக்கையில், இந்த விடயம் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கின்றோம்.  

 மிளகு உற்பத்தி, ஏற்றுமதியில் வியட்நாம் முன்னிலையில் திகழ்கின்றது. உற்பத்தி மாத்திரமன்றி, பெறுமதி சேர்ப்புகளையும் வியட்நாம் மேற்கொள்வதால், அதனுடன் போட்டியிடுவது இலங்கைக்குச் சவாலானதாக அமைந்துள்ளது.   

பெருமளவு மிளகுச் செய்கையாளர்கள் வேறெந்தவொரு வாழ்வாதார வருமானத்தையும் கொண்டிருப்பதில்லை. இன்றைய நிலையில் அவர்கள், பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி, இவர்களின் மறுமலர்ச்சிக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசாங்கத்தின் கடமைகளில் ஒன்றாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .