2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு அன்பளிப்பு

S.Sekar   / 2021 ஜூன் 14 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லேரியாவில் அமைந்துள்ள கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவை செலான் வங்கி அன்பளிப்பு செய்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் பங்களிப்பு வழங்கும் வகையில் அண்மையில் இந்த சிகிச்சைப் பிரிவை வங்கி கையளித்தது. இந்த சிகிச்சைப் பிரிவு, விசேடமாக அமைந்த தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும்.

இந்த கையளிப்பு நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, கொவிட்-19 தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைமை அதிகாரி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, செலான் வங்கியின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ரமேஷ் ஜயசேகர, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் அதிகாரிகள் மற்றும் செலான் வங்கியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நிகழ்வு இடம்பெற்றது.

2020 மார்ச் மாதத்தில் இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவலின் முதல் அலை இனங்காணப்பட்ட போது, அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரத்தியேக வைத்தியசாலையாக கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை மாற்றப்பட்டது. சகல வசதிகளையும் படைத்த, முழுமையாக செயலாற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஒன்றை கொண்டிருக்க வேண்டிய தேவையை கவனத்தில் கொண்டு, நவீன வசதிகள் படைத்த தீவிர சிகிச்சைப் பிரிவை நிறுவுவதற்கு செலான் வங்கி முன்வந்திருந்தது. இந்த சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு கடந்த ஆண்டு இடம்பெற்றது. இந்நிலையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய முயற்சிகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைக்கு சகல வசதிகளையும் படைத்த தீவிர சிகிச்சைப் பிரிவை செலான் வங்கி அன்பளிப்பு செய்துள்ளது.

 

செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட் தொற்றுப் பரவல் என்பது இலங்கையர்களை பாதிக்கும் பிரச்சினையாக மட்டுமின்றி உலகளாவிய ரீதியில் பொது மக்களின் முதல் தர எதிரியாக உள்ளது. இத்தொற்றின் முதல் கட்டத்திலேயே தேசிய சுகாதார சேவைகளுக்கு உதவும் வகையில் விசேட தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்துடன் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவை நிறுவுவது தொடர்பான எமது தீர்மானம், செலான் வங்கியின் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. இந்த தீவிர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கு செலான் வங்கியின் சகல ஊழியர்களும் ஆற்றியிருந்த பங்களிப்பு தொடர்பில் நான் பெருமை கொள்வதுடன், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மத்தியிலும், இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு அவசியமான ஊழியர்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியிருந்தமைக்காக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.

 

நவீன வசதிகளைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, 5 படுக்கைகளைக் கொண்டுள்ளதுடன், நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களுக்காக விசேட தனிமைப்படுத்தல் பகுதியையும் கொண்டுள்ளது. மருத்துவ வாயு மற்றும் ஒட்சிசன் விநியோகத்தை இந்த அலகு கொண்டுள்ளதுடன், மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு இலகுவாக பிரவேசிக்கக்கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது. கொவிட்-19 நோயாளர்களை பராமரிப்பதற்கு போதியளவு இடைவெளியை கொண்டதாகவும், அநாவசியமான வெளிப்படுத்தல்களை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாகவும் இந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .