2024 மே 03, வெள்ளிக்கிழமை

யுனிசெப் ஸ்ரீ லங்கா வர்த்தக சபை ஆரம்பிப்பு

Freelancer   / 2023 ஜூலை 10 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சிறுவர் உரிமை மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப் அமைப்புக்கும், முன்னணி வணிகத் தலைவர்கள் மற்றும் தீர்மானம் எடுப்பவர்களுக்கு இடையில் மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தி வர்த்தக சபையொன்றை யுனிசெப் ஆரம்பித்துள்ளது.

இந்த வர்த்தக சபையானது சிறுவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும், இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோரின் நலன்களுக்காகவும் செயற்பட அர்ப்பணிப்புடன் இருக்கும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய தனியார் துறையிலுள்ள பிரமுகர்கள் அடங்கிய குழுவை ஒன்றிணைக்கும். தெரிவு செய்யப்பட்ட வணிகத் தலைவர்கள் வர்த்தக சபையில் தமது நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை விடவும் தனிநபர்களாகப் பிரதிநிதித்துவம் வழங்குகின்றனர்.

சிறுவர் மற்றும் இளையோர் தொடர்பான நிலைமைகளை மேம்படுத்துவதற்கான உத்திகள், முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டிய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கு வர்த்தக சபையின் உறுப்பினர்கள் அவ்வப்போது ஒன்றுகூடுவார்கள்.

அவர்களின் நிபுணத்துவம், தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பில் நிரூபிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவை புதுமையான தீர்வுகள், பகிரப்பட்ட மதிப்புக்களின் உருவாக்கத்துக்கு வழிவகுக்கும்.

“வணிகத் தலைவர்கள் மற்றும் தீர்மானம் எடுப்பவர்களுக்கு உடனுழைப்புடன் கூடிய தளத்தை உருவாக்கும் நோக்கில் யுனிசெப் ஸ்ரீலங்கா வர்த்தக சபையை ஆரம்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என யுனிசெப் ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்தார். “இந்தச் சபையின் ஊடாக, இலங்கையிலுள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் நிலையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தனியார் துறையின் சக்தியைப் பயன்படுத்துவது இதன் நோக்கமாக அமைந்துள்ளது” என்றார்.

வணிகத் தலைவர்கள், தொழில்துறை அமைப்புக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளடங்கலாக பரந்துபட்ட பங்குதாரர்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவதையும், தனியார் துறையுடன் இணைந்து செயற்படுவதையும் யுனிசெப் அதிகரித்துள்ளது. சிறுவர் உரிமைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நடைமுறையில் உள்ள வணிக மாதிரிகளில் உள்ளடக்குவதன் மூலம், சிறுவர்களை முதலிடத்தில் வைத்து நாம் எதைச் செய்கின்றோமோ அதன் ஊடாக உரிய அளவையும், நிலைபேறு தன்மையையும் அடைவதை யுனிசெப் இலக்காகக் கொண்டுள்ளது.

அங்குரார்ப்பண நிகழ்வில் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் சார்பில் உரையாற்றிய ஹேமாஸ் ஹோல்டிங் பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் தெரிவிக்கையில், “சிறுவர்களின் வாழ்க்கயை முன்னேற்றுவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து உறுதிப்படுத்துவதற்கு இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாம் கூட்டாக அங்கீகரிக்கின்றோம். ஒரே மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்ட தலைவர்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து இறுதி இலக்கை அடைவதற்கு யுனிசெப் வர்த்தக சபை சிறந்த தளமொன்றை அமைக்கும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .