Editorial / 2020 மே 19 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகன இறக்குமதி தொடர்பில், விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, ஏனைய
இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில், அரசாங்கம் கவனம்
செலுத்த வேண்டுமென, இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
''பற்றுச்சான்றுகள் மீது, உயர் எல்லைப் பெறுமதிகளை நிர்ணயித்தல் போன்ற,
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட மாற்று
வழிமுறைகளை, அரசாங்கம் பின்பற்றலாம். மாறாக, வாகன இறக்குமதியை முற்றாகத்
தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை, எம்மால் ஏற்றுக் கொள்ள
முடியாது'' என, இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன்
பீரிஸ் தெரிவித்தார்.

நிதி அமைச்சிடம், இது தொடர்பாக, முறையான கோரிக்கையைச் சமர்ப்பிக்க இலங்கை
வாகன இறக்குமதியாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் எதிர்பார்ப்பான, வெளிநாட்டு ஒதுக்கங்களைப் பேணுவது
தொடர்பான கொள்கையை, வாகன இறக்குமதியாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இருந்த
போதிலும், அடுத்த மாத இறுதியிலேனும், அரசாங்கம் இந்தத் தடையை நீக்கும்
எனத் தாம் எதிர்பார்ப்பதாக, வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
''கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, சகல பொருளாதாரங்களும் நெருக்கடியை
எதிர்கொண்டுள்ளன. தற்போது, சகல குடிமக்களின் பிரதான நோக்கம், ஆரோக்கியமான
தேசமாகும். இந்தச் சூழலில், வெளிநாட்டு நாணயம் நாட்டிலிருந்து
வெளியேறுவதைத் தடுக்க, அரசாங்கம் மேற்கொண்டு இந்தத் திட்டத்தை, நாம்
நன்கு புரிந்து கொண்டுள்ளோம். முழுமையாக முடக்கப்பட்டு, தற்போது, சுமார்
இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. மேலும், ஒரு மாதம் பொறுத்திருந்து, திறைசேரி எவ்வாறான திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளது என்பதை, அவதானிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்'' எனப் பீரிஸ் குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், பிரத்தியேக பாவனைக்கான
வாகன இறக்குமதி 2018ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த சாதனை மிகுந்த பெறுமதியான
1,574 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2019ஆம் ஆண்டில்
48.2% எனும் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்து, 816 மில்லியன் அமெரிக்க
டொலர்களாகப் பதிவாகியிருந்தது. 2018ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மோட்டார்
வாகன இறக்குமதி ஊக்குவிப்பைத் தடுக்கும் வகையில், நடைமுறைப்படுத்தப்பட்ட
கொள்கைகளின் காரணமாக, இந்த வீழ்ச்சி கடந்த ஆண்டில் பதிவாகியிருந்தது.
2018 டிசெம்பர் மாதம் முதல், தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதி
வீழ்ச்சியடைந்திருந்தது.
கடந்த இரண்டு மாத காலமாக, வாகன விற்பனைச் சந்தை ஸ்தம்பித்துள்ளது.
ஆயினும், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில், இந்தத் துறை
மீட்சிபெறும் எனத் தாம் நம்புவதாகவும் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
''ஊரடங்கு காலப்பகுதியில், விற்பனை எதுவும் இடம்பெறவில்லை.
எவ்வாறாயினும், அடுத்த மூன்று மாதங்களில் இந்தத் துறையும் ஏனைய துறைகளைப்
போன்று, எழுச்சி பெறும் என, நாம் கருதுகின்றோம்'' என்றார்.
''நாட்டிலிருந்து, வெளிநாட்டு நாணயம் வெளிச்செல்வதைத் தவிர்க்கும்
வகையில், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளின்
காரணமாக, சகல வாகனங்களின் விலைகளும் 10% முதல் 15% இனால் அதிகரித்துள்ளன.
ரூபாயின் மதிப்பிறக்கத்தால் 1000 cc ஐ விடக் குறைந்த சிறிய ரக
வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன'' எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.
''எதிர்வரும் மாதங்களில், பலரின் முக்கிய குறிக்கோள், வாகனக் கொள்வனவாக
இருக்காது; மாறாகத் தமது பணப்பாய்ச்சலைச் சீராக்கிக் கொள்வதாக
அமைந்திருக்கும். எனவே, பலர் சராசரி விலை அதிகரிப்பின் அடிப்படையில்,
வாகனங்களை விற்பனை செய்வார்கள். ஏற்கெனவே இறக்குமதி செய்த வாகனங்களைப்
பழைய விலையில் விற்பனை செய்வதற்கும் பல விற்பனையாளர்கள் நடவடிக்கைகளை
மேற்கொள்வார்கள்'' என்றார்.
நாட்டில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் போதியளவு காணப்படுகின்றன.
கடந்த வாரம், துறைமுகங்களிலிருந்து பல வாகனங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இந்தச் சூழல், பாவித்த வாகனங்களின் விற்பனைக்குச் சிறந்த சந்தை வாய்ப்பை
ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும் எனவும் பீரிஸ் கருத்து வெளியிட்டார்.
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago