2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

வாகன உதிரிப்பாகங்களுக்கு தட்டுபாடு?

S.Sekar   / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

உள்நாட்டு சந்தையில் வாகன உதிரிப்பாகங்களுக்கு எவ்விதமான தட்டுப்பாடுகளும் இல்லை என வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதியில் ஈடுபடும் நிறுவனங்களும், வாகன திருத்த வேலைகளில் ஈடுபடுவோரும் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்கள் கழற்றப்பட்டு, அவற்றின் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்வது தொடர்பில் பல ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உள்நாட்டு சந்தையில் குறிப்பிட்ட சில வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் போதியளவு இல்லாமை காரணமாக இவ்வாறு வாகனங்களின் உதிரிப்பாகங்கள் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களிலிருந்து கற்றி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டன.

இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில், கொழும்பிலுள்ள வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் விற்பனை நிலையங்களுடன் தொடர்பை ஏற்படுத்திய போது, அந்த வியாபாரத்தில் ஈடுபடுவோரின் கருத்தின் பிரகாரம், கொவிட் தொற்றுப் பரவலுக்கு முன்னர் காணப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போது நான்கு சக்கர பயணிகள் வாகனங்களான கார்கள் மற்றும் வேன்கள் போன்றவற்றின் உதிரிப்பாகங்களின் விலைகள் சற்று அதிகரித்துள்ளன. ஆனாலும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் போதியளவு சந்தையில் உள்ளன. அவற்றுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக குறிப்பிட்டுவிட முடியாது. விலைகளில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வாகனங்களுக்கான சில உதிரிப்பாகங்கள் குறைந்தளவில் சந்தையில் காணப்படுகின்றன. எனும் வகையில் குறிப்பிட்டிருந்தனர்.

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் தொடர்பில் உதிரிப்பாகங்கள் பற்றிய நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்த போது, சந்தையில் போதியளவு உதிரிப்பாகங்கள் இருப்பதாகவும், அசல் உதிரிப்பாகங்களின் விலைகளில் பெருமளவு மாற்றங்கள் எதுவுமில்லை எனவும், கொழும்பு பஞ்சிகாவத்தை, மாளிகாவத்தை பகுதிகளில் போதியளவு அந்த உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்யக்கூடிய நிலை தற்போது காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வாகனங்களுக்கான டயர்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கார்களுக்கான சில டயர்கள் சந்தையில் தட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. ஏனைய வாகனங்களுக்கான டயர்கள் சந்தையில் காணப்படுவதுடன், அவற்றின் விலையில் சற்று அதிகரிப்பு நிலவுவதையும் காண முடிந்தது. உள்நாட்டு சந்தையில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள் அதிகளவில் விற்பனைக்கு உள்ளதுடன், கேள்வி அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுப் பரவலுக்கு முன்னர் முச்சக்கர வண்டி டயர் ஒன்றின் விலை சராசரியாக 1250 ரூபாய்க்கு காணப்பட்டதாகவும், தற்போது அதன் விலை ரூ. 1550 வரை அதிகரித்துள்ளதாகவும் ரயர் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த வாரங்களில் கொழும்பிலுள்ள சில உள் வீதிகளில் தரித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் பக்கக் கண்ணாடிகள் போன்றவற்றை கழற்றிச் செல்வது போன்ற CCTV காணொளிகள் சமூக வலைத் தளங்களில் பதிவாகியிருந்ததுடன், இதற்கு சந்தையில் குறித்த ரக வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் தட்டுப்பாடு நிலவுகின்றமை காரணமென சில தரப்பினர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

ஆனாலும், இவை திருட்டு சம்பவங்கள் எனவும், சந்தையில் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இல்லை என்பதுடன், குறித்த ரக வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை கொழும்பில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் குறித்த வாகனங்களின் உதிரிப்பாக இறக்குமதியாளர்கள் தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.

அவதானமாக இருப்பதனூடாக, இவ்வாறான திருட்டு சம்பவங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதுடன், சன நடமாட்டம் குறைந்த, உள்ளக வீதிகளில் வாகனங்களை நீண்ட நேரத்துக்கு தரித்து செல்வதை இயலுமானவரை தவிர்த்துக் கொள்வதனூடாகவும், பாதுகாப்புடன் கூடிய பொது வாகன தரிப்பிடப் பகுதிகளை இதற்காக தெரிவு செய்வதனூடாகவும் இவ்வாறான இழப்புகளை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X