2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விவசாய சூழல்கட்டமைப்பை ஆராய சுவிட்சர்லாந்து நிபுணர் குழு விஜயம்

S.Sekar   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் விவசாய சூழல்கட்டமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக சுவிட்சர்லாந்தின் நிபுணர்கள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் (1) இலங்கையை வந்தடைந்த இவர்கள், நாட்டில் 10 நாட்கள் தங்கியிருந்து, விஜயங்களை மேற்கொண்டு, துறையின் பிரதான பங்காளர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதுடன், சேதன விவசாய முறைமை மற்றும் கொம்போஸ்ட் உரம் தொடர்பான பரிபூரண பயிற்சிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

விவசாய அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் மற்றும் விவசாய திணைக்களம், சேதன விவசாயத்துக்கான சிறப்பு மையம் (CEOA), தேசிய உர செயலகம், விவசாய ஆய்வுக் கொள்கைக்கான இலங்கை சம்மேளனம் (SLCARP), பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம், திறன் விருத்தி இராஜாங்க அமைச்சு, தொழிற்கல்வி, ஆய்வுகள் மற்றும் புத்தாக்கம், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் (CRI), இலங்கை தேயிலை சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (TRI) போன்றவற்றின் உயரதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொள்வர்.

கல்பிட்டி, தம்புத்தேகம, வெலிவேரிய, ரதவானை, பெலிஹுல்ஓயா மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளைச் சேர்ந்த சேதன மற்றும் பாரம்பரிய விவசாயிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள். அத்துடன் சந்தைகள், கோழிப் பண்ணைகள், பாற் பண்ணைகள், தேயிலைத் தொழிற்சாலைகள், குப்பை சேகரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கு விஜயம் செய்வர்.

இந்த விஜயத்துக்கான முழு ஏற்பாடுகளையும் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் (A. Baur & Co. (Pvt.) Ltd) மேற்கொண்டுள்ளது. இதற்காக சுவிட்சர்லாந்திலிருந்து இயங்கும் உலகின் இரு முன்னணி சேதன விவசாய ஆய்வு அமைப்புகளுடன் கைகோர்த்துள்ளது. சேதன விவசாயத்துக்கான இருப்பிடமாக சுவிட்சர்லாந்து திகழ்வதுடன், உலகின் சேதன விவசாயத்தில் 6ஆவது அதியுயர் ஊடுருவலைக் கொண்டுள்ளது. விவசாய நிலத்தில் 16.5 சதவீதம் சேதன விவசாய நிலமாக அமைந்துள்ளது.

சேதன விவசாயத்தில் உலகின் முன்னணி ஆய்வு மற்றும் அபிவிருத்தி அமைப்புகளாக கருதப்படும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சேதன விவசாய ஆய்வு நிறுவனம் (FiBL) மற்றும் பிரயோக விஞ்ஞானத்துக்கான பேர்ன் பல்கலைக்கழகத்தின் விவசாய, வனாந்தர மற்றும் உணவு விஞ்ஞானத்துக்கான கலாசாலை (HAFL) போன்றவற்றுடன் பவர் கைகோர்த்திருந்தது.  FiBL மற்றும் HAFL ஆகியன துறைசார் தமது அறிவைப் பயன்படுத்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கைகோர்த்து பணியாற்றும்.

மேலும் இந்த நிபுணர்கள் இரு பயிற்சி அமர்வுகளையும் முன்னெடுப்பார்கள். களனியிலுள்ள பவர் உர தொழிற்சாலையைச் சேர்ந்த பல்வேறு அணியினருக்கு ஒரு பயிற்சியும், அனுராதபுரத்திலுள்ள பவர் நிறுவன அலுவலகத்தில் பவர் ஊழியர்கள், முகவர்கள், விநியோகத்தர்கள், பிரதான விவசாயிகள் மற்றும் கொம்போஸ்ட் உர தயாரிப்பாளர்களுக்கு மற்றொரு பயிற்சியும் முன்னெடுக்கப்படும். இவை அனைத்தும் கடுமையான கொவிட்-19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்படும்.

இந்த நிபுணர்கள் குழு பல வருட கால கல்விசார் மற்றும் பிரயோக அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இந்தக் குழுவில் HAFL இல் இயற்கை வளங்கள் முகாமைத்துவ பேராசிரியரான பேராசிரியர். கலாநிதி. கிறிஸ்டோஃவ் ஸ்டுடர், HAFL இல் Tropical Agroecosystems இன் சிரேஷ்ட விஞ்ஞானியான கலாநிதி. குர்பிர் எஸ் புல்லர், FiBL இன் சிரேஷ்ட ஆலோசகர் போல் வன் டென் பேர்க் மற்றும் FiBL இல் பயிர் நோய்க்கூற்றியல் மற்றும் மண் வளம் தொடர்பான சிரேஷ்ட விஞ்ஞானியும், Swiss Society for Phytiatry இன் சபை அங்கத்தவருமான கலாநிதி. ஜாக்ஸ் ஜி ஃபுச்ஸ் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

சேதன உரத்தைப் பயன்படுத்துவதற்கு மாறும் இலங்கையின் தீர்மானத்துக்கமைய, இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த நிபுணர்கள் குழுவினர் விவரமான, பிரயோகமான மற்றும் விஞ்ஞான ரீதியான திட்டத்தை முன்வைப்பதுடன், எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்சனைகள் தொடர்பில் இலங்கைக்கு இனங்கண்டு, அவற்றுக்கு முகங்கொடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .