2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'மக்கள் போராட்டமாக மாறினால்தான் தீர்வு கிட்டும்'

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

“காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டமானது, மக்கள் போராட்டமாக மாறினால்தான், சரியான தீர்வு கிடைக்கும்” என, வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வவுனியாவில் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதத்தின் மூன்றாவது நாளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

“காணாமல்போன பிள்ளைகளின் பெற்றோர்கள், கடந்த மூன்று நாட்களாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   பிள்ளைகளைத் தொலைத்தவர்கள் மற்றும் இராணுவத்திடம் பிள்ளைகளை நேரடியாக ஒப்படைத்தவர்கள் படுகின்ற வேதனையை​, அளவிட முடியாதது.

என்னுடைய சகோதரனும்  காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார். உண்மையில், இதுவொரு தர்ம சங்கடமான நிலையாக இருக்கின்றது. இவர்கள் எங்கிருக்கிறார்கள்? இவர்கள் தொடர்பில் யாரிடம் சென்றுக் கேட்பது? இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? என்று, இனங்காண முடியாதுள்ளது.

கடந்த வருடமும், ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பாகத் தெரிவித்திருந்தேன். ஆனால், அதற்கு சாதகமான அல்லது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பில், தீர்க்கமான முடிவு கிட்டவில்லை.

ஆனால், காணாமல் போனவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தொடர்பில், அரசாங்கம் எங்களிடம் கேட்கிறது. அது தெரியாமல் தான், பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர், யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், பரிதவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்போராட்டமானது, மக்கள் போராட்டமாக மாறுகின்ற பட்சத்தில்தான், இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என்று, நான் நம்புகின்றேன். என்னைப் பொறுத்தமட்டில், குறிப்பாக எங்களுடைய தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்று தான் நான் கருதுகின்றேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .