2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மாணவர்களை விசாரணை செய்தமைக்கு எதிராக மறவன்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 07 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


திருட்டு சம்பவம் தொடர்பில் மாணவர்களை மட்டுமே விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறவன்குளம் மக்கள் இன்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கணினி உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்திற்கு மாணவர்களை மட்டும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியதற்கு  எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை மாணவர்களும் பாடசாலை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் இந்த  விசாரணைக்கு பாடசாலையின் அதிபர் உடந்தையாக இருந்தார் எனவும் சுட்டடிக்காட்டினர்.

கிடாச்சூரி பாடசாலையில் கணனி உட்பட சில பெறுமதியான பொருட்கள் கடந்த வாரம்  திருட்டுபோயிருந்த நிலையில் பாடசாலை அதிபரினால் வவுனியா பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் அவர்கள் மறவன்குளத்தினை சேர்ந்த 10 மாணவர்களும் ஈஸ்வரிபுரத்தினை சேர்ந்த 4 மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் இம் மாணவர்களின் பெயர் விபரங்களை பாடசாலை அதிபரே பொலிஸாருக்கு வழங்கியதாக தெரிவித்தும் அவ்வாறான செயற்பாடு பின்தங்கிய தமது கிராமத்தை இழிவுபடுத்தும் நிலை எனவும் தெரிவித்து மாணவர்கள் அப்பாடசாலைக்கு தாம் செல்ல மாட்டோம் என பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் பெற்றோர் தமது பிள்ளைகளை அப்பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் எனவும் தெரிவித்து மறவன்குளம் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இங்கு பிரசன்னமாகியிருந்த வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிமனையின் கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அப்துல் பாரி, பிரதேசசபை உறுப்பினர் ஜோசப், அயல்பாடசாலை அதிபர்கள் ஊர் பிரமுகர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் பெற்றோருடனும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் அவர்களுடனான கலந்துரையாடலில் தீர்வு காணப்படாமையினால் குழுவொன்றினை அமைத்து தீர்வு காணுவதற்கு பத்து வேலைநாள் காலம் தருமாறு வலயக்கல்விப்பணிமணை கேட்டுக்கொண்டதுடன் அதுவரை பொலிஸார் விசாரணை மேற்கொண்ட சாதாரணதர வகுப்பு மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர் விரும்பினால் அனுமதிக்காது விடுமாறும் ஏனைய மாணவர்களை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்குமாறும் கோரியிருந்தனர்.

எனினும் அதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காது தமது பிள்ளைகள் அனைவரையும் மறவன்குளத்தில்  உள்ள பாடசாலையிலும் கல்மடு பாடசாலையில் கற்பதற்கும் ஏற்பாடு செய்து தருமாறும் அதுவரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர்.

இதன் காரணத்தால் தீர்வு காணப்படாத நிலையில ஆர்ப்பாட்டமும் இன்று கைவிடப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X