2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத், ரொமேஷ் மதுசங்க


வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த  உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவரை வவுனியா பொலிஸார்  கைதுசெய்தமையைக் கண்டித்து அந்தப் பாடசாலையைச் சேர்ந்த  மாணவர்கள்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 8ஆம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதன்போது பாடசாலை வேளையில் மதுபோதையில் இருந்த மாணவர்கள் சிலர் தகராறு விளைவித்தமையால் ஆசிரியர் மேற்படி மாணவர்களை தண்டித்துள்ளார். இதன்போது, மாணவன் ஒருவன் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த நிலையில், மேற்படி மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக குறித்த ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர் குறித்த ஆசிரியர் வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய நேற்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியரை கைதுசெய்தமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேற்படி மாணவர்கள், தங்களது ஆசிரியரை வழக்கிலிருந்து விடுதலை செய்து கற்றல் செயற்பாடுகளுக்கு  உதவ வேண்டும் எனவும்; சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதை அறிந்து குறித்த பாடசாலைக்குச் சென்ற  வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமாராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்,  பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்துவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X