2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

எமக்கும் ஐங்கரநேசனுக்கும் தொடர்பில்லை: மாவைக்கு சுரேஸ் கடிதம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத், எஸ்.றொசேரியன் லெம்பேட்

'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் தமிழரசுக் கட்சியின் சார்பில் வட மாகாணசபை தேர்தலில் எமது கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு போட்டியிட்டவருமான பொ.ஐங்கரநேசனுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'எம்மால் கலந்துரையாடப்படாமல் தனிப்பட்ட ரீதியில் பொ.ஐங்கரநேசனுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது' என்றும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடித்ததில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

'ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பபட்டு தழிரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வடமாகாணசபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பொ.ஐங்கரநேசன் என்பவர் தனிப்பட்ட முறையில் வடமாகாணசபைக்கான அமைச்சுப் பதவியைப் பெற்றதன் காரணமாகவும் தனக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்த அமைச்சுப் பதவியானது தமிழரசுக் கட்சியினுடைய தலைமையின் பரிந்துரையின் பேரில், முதலமைச்சரினால் தனக்குத் தனிப்பட்டரீதியில் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுவே உண்மையுமாகும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான என்னுடன் பொ.ஐங்கரநேசன் அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பாக தமிழரசுக் கட்சியோ முதலமைச்சரோ எவ்விதக் கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஒரு அமைச்சுப் பதவியை நீங்கள் வழங்க விரும்பினால் அதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்குமாறு நான் கோரியிருந்தபோதிலும் என்னுடன் எவ்விதக் கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படாமல் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளபடி, அவருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் எதிர்காலத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் தங்களுக்குத் தெளிவு படுத்துவதுடன் அவர் கூறியது போன்றே அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பானது தனிப்பட்ட முறையில் அவருக்கு வழங்கப்பட்டதென்ற அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு எந்தவிதமான அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எதிர்காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு ஓர் அமைச்சுப் பதவியை வழங்கியதாக தவறானதும் பொய்யானதுமான பரப்புரைகளைச் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்வதுடன் செய்ய மாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்' அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X