-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவிட்டான் பொன்வெளிக்கிராம மக்கள் தமது குடியேற்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்தும் நிலவி வருகின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் முகமாக ஜனாதிபதிக்கு மகஜர் வழங்கும் முகமாக அக்கிராம மக்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்வை.தேசப்பிரிய அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வந்து தமது பிரச்சினைகளை கதறி அழுது மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரிவித்து குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் குறிப்பிட்டுள்ளவையாவன...
கடந்த 1980ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருவிட்டான் பொன்வெளிக்கிராமத்தில் வசித்து வருகின்றோம். நாங்கள் குடியிருக்கும் குடி நிலைக்காணி அரசாங்க அதிகாரிகளினால் வழங்கப்பட்ட அரச காணியாகும்.
மேலும் நாம் குடியிருக்கும் காணி சுமார் 40 பேர்ச் விஸ்தீரனம் உடையது. எனினும் எமது கிராமத்தில் வசிக்கும் சில குடும்பங்களுக்கு அவர்கள் குடியிருக்கும் காணிக்கான அனுமதிப்பத்திரம் 20 பேர்ச் காணிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட கிராம மக்கள் மிகுதியான 20 பேர்ச் காணித்துண்டிற்கான அனுமதிப்பத்திரத்தினை பெறுவதற்கு அரசாங்க அதிகாரிகள் மூலம் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
அத்துடன் எவ்வித அனுமதிப்பத்திரத்தினையும் பெறாத எமது கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு தாம் வசிக்கும் 40 பேர்ச் காணிக்கான அனுமதிப்பத்திரத்தினை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் பல வருடங்களாக மேற்கொண்டனர்.
எனினும் எமது நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த சூழ்நிலை, உயிராபத்தான நிலைவரம் காரணமாக எமது கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்கள் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து சென்றனர்.
பின்னர் நாட்டில் சுமூக நிலை ஏற்பட்டதன் காரணமாக எமது எருவிட்டான் கிராமத்தில் நாம் மீளக்குடியமர்ந்தோம்.
மேலும், இடம்பெயர்ந்த எமது கிராம மக்கள் இந்தியாவில் தொடர்ந்தும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு நானாட்டான் பிரதேச செயலக அதிகாரிகளினால் குடிநிலக்காணிகள் யாவும் 40 பேர்ச் விஸ்தீரனம் கொண்ட துண்டுகளாக நில அளவை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அமைய குறித்த கிராமத்தில் வசிக்கும் நாம் அனைவரும் 40 பேர்ச் காணியினை உள்ளடக்கி நிரந்தர வீடுகள், குடி நீர் கிணறுகள், மலசல கூடம், நீண்ட காலம் பலன் தரக்கூடிய மரங்கள் ஆகியவை நிர்மாணித்து நிறுவியுள்ளோம்.
மேலும் குறித்த காணிக்கு வீதிகள், மின்சார விநியோக கம்பங்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
குறித்த குடி நிலக்காணிக்கான உள்ளக நீர் இணைப்புக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குறித்த காணியில் குடியமர்ந்துள்ள மக்களுக்கு நிக்கோட், யு.என்.எச்.சி.ஆர்., யுனிசெப் போன்ற அமைப்புக்களினால் பல திட்டங்களும் அமுல்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக நானாட்டன் பிரதேச செயலக அதிகாரிகள் எமது கிராமத்திற்கு வந்து மீண்டும் நில அளவையில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த 40 பேர்ச் கொண்ட காணியினை 20 பேர் ஆக ஆளவீடு செய்கின்றனர்.
இதனால் இக்கிராம மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இக்காணிக்கு பலர் போலி பத்திரங்களை தயார் செய்ய முனைகின்றனர்.
எமது காணியில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித்திட்டங்களை தடுக்க முனைகின்றனர்.
எனவே குறித்த மீள் நில அளவைகளை நிறுத்தி எமது சுதந்திரமான குடியேற்றத்திற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என அக்கிராம மக்கள் அரச அதிபரிடம் வழங்கியுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.