2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

'தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்
, எஸ்.கே.பிரசாத், நவரட்ணம் கபில்நாத்

'முல்லைத்தீவு, கொக்குளாய் பிரதேசத்தில் அத்துமீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும' என வடமாகாண சபையின் புனர்வாழ்வு, இன நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபையின் புனர்வாழ்வு, இன நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் அன்ரனி ஜெயநாதன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை அப்பகுதிக்கு விஜயம்செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக இப்பகுதியில், 1984 ஆண்டுக்கு முன்னர் 32 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது 350 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அத்துடன் இவர்கள், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தி தொழில் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால் கடல்வளம் அழியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையைக் கருத்திற்கொண்டு பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, உரையாற்றிய அமைச்சர் டெனிஸ்வரன், கொக்குளாய் பிரதேசத்தில் தமிழ் மீனவர்கள் தொழில் இழக்கும் நிலை ஏற்பட விடமாட்டேன' என்று தெரிவித்தார்.  

'தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக கொக்கிளாய் பிரதேச தமிழ் மக்கள் எமக்கு முறையிட்டுள்ளார்கள். இதனை அனுமதிக்க முடியாது.

தமிழ் மக்கள் தற்போது தங்கள் காணிகளை இழந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் தங்கள் தொழில் நடவடிக்கைகளையும் இழக்கும் நிலை ஏற்படும். ஆகவே இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற இடமளிக்க முடியாது' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அவர், கொக்குதொடுவாயில் குடியேறியுள்ள சிங்கள மக்களையும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.   இதன்போது அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அவர் கேட்டறிந்து கொண்டதுடன் மீன்பிடித்தொழில் ஏற்பட்டுவரும் முரண்படுகள் தொடர்பாகவும் கேட்றிந்தார்.

இதேவேளை தமிழ் மக்களின் காணிகளை சிங்கள மக்கள் அத்துமீறி பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கள் தொடர்பாக அங்குள்ள மக்களிடம் அமைச்சர் கேட்டபோது அம் மக்கள் தமது காணிகளுக்கு நீண்டகால ஆவணங்கள் இருப்பதாக தெரிவிதததுடன் தமது நிலை தொடர்பாக விளக்கமளித்தனர்.

இந்திய மீனவர்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் 

'இந்திய மீனவர்கள் கடல் எல்லை தெரியாமலே எமது கடற் பிரதேசங்களுக்குள் வருகின்றார்களே தவிர அவர்கள் எமது வளங்களை அழிப்பதற்காக வரவில்லை. ஆகவே அவர்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டாம்'  என வடமாகாண கடற்றொழில் மற்றும் மீன்பிடித் தொழில் அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினரைச் ஞாயிற்றக்கிழமை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நடைபெற்று முடிந்த வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் எங்கள் எல்லோரின் பேசு பொருளாக முல்லைத்தீவின் முள்ளிவாய்கால் இருந்திருக்கின்றது. யுத்தத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவினை; அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற இளைஞர்கள், யுவதிகள் நாங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைக்கு தங்கள் பங்களிப்பினை வழங்க வேண்டும்.

வடமாகாண சபை நிதியில் ஒருசதம் கூட இல்லாத நிலையில் நாங்கள் அதனை பொறுப்பேற்றுள்ளோம். இம்மாகாணத்தினை ஏனைய மாகாணங்களை விட ஒரு முதன்மை மாகாணமாக மாற்றுவதற்கு இராஜதந்திர ரீதியில் சில நகர்வுகளை நாங்கள் மேற்கொண்டு, வெளிநாடுகளிலிருந்து நிதியினை பெறவேண்டும்.

இந்தியா வட மாகாணத்திற்கு பெரும்பாங்காற்றும் என உறுதிமொழி அளித்துள்ளது. இந்த நம்பிக்கையில் எங்கள் மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற கடற்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களிற்கு நஷ;டஈடு வழங்குவது தொடர்பில் வடமாகாண சபையினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X