2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

பொலிஸார் இலஞ்சம் கேட்டதாகக் கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸார் இலஞ்சம் வாங்குவதற்கு  முற்பட்டதாகக் கூறி  வீதியை  மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு 07.30 மணியளவில் மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதியில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றுகொண்டிருந்த ஒருவர், இலுப்பையடியில் உள்ள கடை ஒன்றிற்குச் செல்வதற்காக  முச்சக்கரவண்டியை நிறுத்த முற்பட்டபோது, எதிரே நின்ற பொலிஸார்  சமிக்ஞை செய்து முச்சக்கரவண்டியை அழைத்தனர்;.

இந்த நிலையில் முச்சக்கரவண்டியை பொலிஸார் அழைத்த இடத்தில் கொண்டுசென்று நிறுத்த முடியாமையால் அருகில் உள்ள சந்தியில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு, சாரதி அனுமதிப்பத்திரத்தையும் வாகனத்தின் ஆவணங்களையும் முச்சக்கரவண்டியைச் செலுத்திச்சென்றவரான மகனும் அவரது தாயும்  கொண்டுசென்று பொலிஸாரிடம் காட்டியுள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியை தவறாகத் திருப்பியதாகவும் தவறான இடத்தில் நிறுத்தியதாகவும் கூறி போக்குவரத்து பொலிஸார் இலஞ்சம் கோரியதாக மேற்படி முச்சக்கரவண்டியில் சென்ற  தாய் தெரிவித்தார்.

இந்த நிலையில், போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவர்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை தன்வசப்படுத்திக்கொண்டு நீதிமன்றத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.

இருப்பினும் தாம் தவறு செய்யவில்லை என முச்சக்கரவண்டியில் சென்ற தாயும் மகனும் கூறினர். தாம் இலஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காகவே பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் இவர்கள் கூறினர்.

தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை தருமாறு கோரி  தாயும் மகனும் வீதியில் இருந்து கோசம் எழுப்பிய நிலையில், அங்கு திரண்ட பொதுமக்களும்; இவர்களுக்கு ஆதரவாக வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சிவில் உடையிலும் சீருடையிலும் நின்ற பொலிஸார் அங்கு கூடிய பொதுமக்களை அவ்விடத்தை விட்டு நகருமாறு பணித்ததுடன்,  ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுக்க விடாது தடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திரஜித் தலைமையிலான குழுவினர் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கி விட்டு அவர்களை வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்ய வருமாறு பணித்தனர்.

இதேவேளை, அருகில் இருந்த முச்சக்கரவண்டி  தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டிகளையும் அங்கு இருந்து சிவில் உடையில் இருந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள்  விரட்டியுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .